புதுச்சேரி அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் 2 மணி நேரம் வேலை குறைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 27) வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய்க்கு எதிராக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியபோது, “புதுச்சேரியில் பெண்களுக்கு வேலையில் இரண்டு மணி நேரம் சலுகை வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதன்படி அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பதற்கான கோப்பில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வேலைக்கு வருவதற்கு பதிலாக காலை 11 மணிக்கு பெண்கள் வேலைக்கு வந்தால் போதும். இதனால் பெண்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமாகவும் ஊக்கத்துடனும் பணியாற்றுவார்கள்.
அரசு துறைகளில் இந்த சட்டத்தை அமல்படுத்தினால் அதனை தொடர்ந்து தனியார் துறைகளிலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்