புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1969-ஆம் ஆண்டு புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் ராமச்சந்திரன். 1980 – 83 காலகட்டத்தில் திமுக அரசில் புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தார். 1990 – 91 திமுக – ஜனதாதளம் கூட்டணியில் முதல்வராக இருந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
வயது முதிர்வு காரணமாக, அண்மைக்காலமாக தீவிர அரசியலில் இருந்து ராமச்சந்திரன் விலகியிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராமச்சந்திரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.

ராமச்சந்திரன் மறைவுக்கு புதுச்சேரி ஆளுநர் கைலாசநாதன், புதுவை முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கைலாஷ்நாதன்
“புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
புதுச்சேரி மக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பும் மாநில வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் பாராட்டத் தகுந்தவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், முதுபெரும் அரசியல் தலைவருமான ராமச்சந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர் புதுச்சேரி மாநிலத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறைவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திமுக முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக சார்பில் முதலமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எம்.டி.ஆர் ராமச்சந்திரனின் இறுதிச்சடங்கு புதுவை மடுகரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று மாலை 4 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
NITI Aayog : சந்திரபாபுவுக்கு 20 நிமிடம் அனுமதி… ஆனால் எனது மைக் ஆப் – கொந்தளித்த மம்தா
‘நண்பர்கள்’ பட மம்தா குல்கர்னியை ஞாபகம் இருக்குதா? 25 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார்!