புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று (ஆகஸ்ட் 9) டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15ஆவது சட்டபேரவைக்கான தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளையும் பாஜக 6 தொகுதிகளையும் வென்றன.
இதன்மூலம் 16 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, புதுச்சேரி முதல்வராக 4ஆவது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பதவியேற்றார்.
புதுச்சேரியில் நாளை (ஆகஸ்ட் 10) ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்க இருக்கிறது. இதற்கு அடுத்த நாள் (ஆகஸ்ட் 11) நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில்தான் திடீர் பயணமாக டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கூடுதல் நிதி கேட்டு மத்திய உள்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு நேற்று வரை(ஆகஸ்ட் 8), வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்தே இன்று பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று இரவு (ஆகஸ்ட் 8) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு நேற்று இரவு (ஆகஸ்ட் 8) திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் ரங்கசாமி, முதல்முறையாக இன்று (ஆகஸ்ட் 9) பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற ஒரு முதல்வர், நிர்வாக அடிப்படையில் பிரதமர் மோடியை சந்திக்க 15 மாதங்கள் ஆகியிருக்கின்றன.
ஜெ.பிரகாஷ்
குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டுக்கு 33 கோடி: காரணம் சொல்லும் அண்ணாமலை