வைஃபை ஆன் செய்ததும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த தகவல் இன்பாக்சில் வந்தது.
அந்த தகவலை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று (ஜனவரி 10) காலை அட்வகேட் ஜெனரலான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குட்மார்னிங் செய்தி அனுப்பியிருந்தார். அதில், ’நண்பர்களே காலை வணக்கம். உங்கள் அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பிரைவேட் ப்ராக்டிஸுக்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். இதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். வாழ்த்துகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்தின் ராஜினாமா உயர் மட்ட வட்டாரங்களில் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
சண்முக சுந்தரம் மூத்த வழக்கறிஞர். கட்சியிலும் சீனியர். 1995 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி வழக்கைத் தொடர்ந்தவர். இந்த காரணத்துக்காகவே அவர் அரசியல் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை அதிகாலை 5 மணிக்கே மருத்துவமனைக்கு சென்று பார்த்தார் அப்போதைய திமுக தலைவர் கலைஞர். அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவுகள் சண்முக சுந்தரத்தின் உடம்பில் இன்றும் இருக்கின்றன.
இந்த பின்னணியில்தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் சண்முகசுந்தரம் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே ‘சண்முகசுந்தரம் கிரிமினல் வழக்குகளில் தலை சிறந்தவர். ஆனால் அட்வகேட் ஜெனரல் என்ற நிலையில் அவரால் மாநில அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் ரிட் மனுக்கள், சிவில் வழக்குகளை கையாள முடியவில்லை. இதில் அவர் சிரமப்படுகிறார்’ என்று முதலமைச்சரிடமே சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஆறேழு மாதங்களுக்கு முன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்தை மாற்றிவிடலாம் என்றும் சில ஆலோசனைகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டன. முதல்வர் இது தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து சண்முகசுந்தரமே அட்வகேட் ஜெனரலாக தொடர்ந்தார்.’
இதற்குப் பிறகு வழக்கறிஞர்கள் விவகாரம் என்றாலே முதல்வருக்கு டென்ஷன் ஆகிற நிலைதான் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பின் அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் கே.கே.எஸ்.எஸ்,ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளின் விடுதலையை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சூமோட்டாவாக எடுத்து விசாரிக்க ஆரம்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக பொன்முடி இன்னொரு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே 2011-15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சட்டத் துறை செயலாளராக பணியாற்றியதும், அப்போது இதே வழக்கு விவாகரத்தில் பொன்முடியின் சொத்துக்களை முடக்கும் கோப்புகளை கையாண்டார் என்பதையும் தண்டனையை அறிவிக்கும் டிசம்பர் 21 அன்றுதான் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறினார்கள். இதுவும் சர்ச்சையானது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் இருந்து வந்த தகவல் அவரை மேலும் டென்ஷனாக்கியது. அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இன்னும் சில திமுக அமைச்சர்கள் சட்ட நெருக்கடிக்கு ஆளாகி தகுதி இழப்பு, கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதுதான் அந்த டென்ஷன் தரும் தகவல்.
இந்த பின்னணியில் தான் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டில் ஓர் அவசர ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முதல்வரின் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் இவர்களோடு சொத்துக் குவிப்பு சூமோட்டாவை எதிர்கொண்டிருக்கும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், தங்கம் தென்னரசு மற்றும் ஐ.பெரியசாமி, தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி, எம்பிக்களாக இருக்கும் வழக்கறிஞர்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர். இளங்கோ, அமைப்புச் செயலாளரும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்., முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
அப்போது. ‘ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போட்டு அவர் தப்பிக்க முடியாதபடி சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது திமுக வழக்கறிஞர் அணி. இப்போது வரிசையாக நமது அமைச்சர்களே கைது, விசாரணை என்ற நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள். அமலாக்கத்துறை பற்றி இந்தியாவிலேயே யாரும் வைக்காத வாதங்களை எல்லாம் முன் வைத்தோம். ஆனாலும் உச்ச நீதிமன்றம் வரை திமுகவுக்கான சட்ட நெருக்கடி தொடர்வது ஏன்” என்பது குறித்துதான் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது வழக்கறிஞரும் எம்பி.யுமான வில்சன், ‘நீதிபதி ஜெயச்சந்திரன் 2011-15 காலகட்டத்தில் அதிமுக அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்பது அந்த வழக்கின் ஆரம்ப கட்ட ஆவணங்களிலேயே இருக்கிறது. இதை நாம் கவனிக்காமல் விட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘நீதிமன்றத்தில் என் வழக்கை ஜட்ஜ் எடுத்து விசாரிக்கிறாரு. ஆனா அரசு வழக்கறிஞரோ அண்ணாச்சி (கே.கே.எஸ்.எஸ்.ஆர்.) வழக்கை வாதாடிக்கிட்டிருக்காரு. ஜட்ஜே எடுத்துச் சொன்ன பிறகுதான் அரசு வழக்கறிஞருக்கு மாத்தி வாதாடுறோம்னு தெரியுது. இப்படிதான் இருக்கு நெலைமை’ என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது, ‘திமுகவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு சில வேலைகளை தந்திரமாக செய்துகொண்டிருக்கிறது. நாம் சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுகிறோம்’ என்று முதல்வரிடம் ஒரு எம்.பி. சொல்லியிருக்கிறார்.
அப்போது குறுக்கிட்ட ஆ.ராசா, ‘ நீதிபதி அனிதா சுமந்த் சனாதன வழக்கை விசாரிக்கிறார். அவர் ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர். இதை அடிப்படையாக வைத்தே அவர் இவ்வழக்கை விசாரிக்க கூடாது என நாம் எதிர்த்திருக்க வேண்டும்’ என்று சுட்டிக் காட்டினார்.
இந்த ஆலோசனையின் போது, ‘அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்ததை முன்பே சுட்டிக்காட்டினாலும் நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என்று சொன்ன நீதிபதி ஜெயச்சந்திரன் மீது எம்பிக்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கலாம். அதன்மூலம் நம் எதிர்ப்பை பதிய வைப்போம்’ என்றும் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஆர்.எஸ்.பாரதி. ‘இதை நாம் கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும். சட்ட ரீதியாகவே இன்னும் பலமான முயற்சி எடுக்க வேண்டும்’ என்று பதிலளித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக மேலும் சிலரை நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலன், முதல்வரின் செயலாளர் முருகானந்தம், மற்றும் முன்னாள் முதல்வரின் செயலாளரும் தற்போதைய நிதித்துறை செயலாளருமான உதயசந்திரன் ஆகியோர், ‘உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் டீமில் மாற்றம் செய்தாக வேண்டும்’ என்று முதல்வரிடம் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த கூட்டம் முடிந்த இரு நாட்களிலேயே, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்தை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் தரப்பில் இருந்து அவருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதே நேரம் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம், ‘நீங்கள் அட்வகேட் ஜெனரலாக இருக்க விருப்பமா?’ என்றும் முதல்வர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டிருக்கிறது. ராமன் தரப்பில் சில உத்தரவாதங்கள் கேட்கப்பட்டுள்ளன.
சில நாட்கள் இந்த நிலை தொடர ஜனவரி 8 ஆம் தேதி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் அமைச்சர்கள் மீதான சூமோட்டா வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஸ்பெஷல் பி.பி.யாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
இந்த நிலையில்தான்… அட்வகேட் ஜெனரலான சண்முக சுந்தரம் ராஜினாமா செய்வது என முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு நெருக்கமானவர்களோ, ’அடுத்தடுத்து அமைச்சர்கள் மீதான சட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து சண்முக சுந்தரத்திடம், ‘இவ்வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷை மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கூறப்பட்டுள்ளது. அதை சண்முகசுந்தரம் தனது இயல்புக்கு மாறானதாக கருதி ராஜினாமா முடிவுக்கு வந்தார்’ என்கிறார்கள்.
இன்று காலை உயர் நீதிமன்றத்துக்கு சென்று ஏ.ஜி. அறையில் இருந்த தனது உடைமைகளை எடுத்துச் சென்றுவிட்டார் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்.
அதேநேரம் அடுத்த அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட இருக்கிற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இன்று முதல்வரை சந்தித்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு ஏஜியாக பதவி ஏற்கவுள்ளார் என உயர் நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்வகேட் ஜெனரல் பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வதும் மாற்றப்படுவதும் கலைஞர் ஆட்சியிலேயே நடந்திருக்கிறது. 2006 திமுக ஆட்சியில் முதல்வர் அட்வகேட் ஜெனரலாக விடுதலை இருந்தார். பின் அவருக்கு பதிலாக மாசிலாமணி அப்பதவியை வகித்தார். அதே திமுக ஆட்சியில் மாசிலாமாணியும் மாற்றப்பட்டு பி.எஸ்.ராமன் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர்தான் இப்போதும் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட இருக்கிறார்.
அட்வகேட் ஜெனரல் மட்டுமல்ல உயர் நீதிமன்றம் தொடர்பான தமிழக அரசின் மேலும் சில பதவிகளிலும் மாற்றம் வர இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டிரைக்கை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
அசோக் செல்வன், சாந்தனுவின் கிரிக்கெட் மோதல்: ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் எப்படி?