“புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி, லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. உலகிலும், இந்தியாவிலும் கொரோனா விதிமுறைகளைக் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றியதாலும், இதற்கான தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்தப்பட்டதாலும், கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியது. என்றாலும், முழுமையாக அழியவில்லை.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
இந்த நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதனால், சீனா அரசு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. புத்தாண்டிற்கு பிறகு சீனாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வேகமெடுக்கும் என்றும் அப்போது 15 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழக்ககூடும் என்றும் சீனாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. சீனாவில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளிலும் கொரோனா தொற்று வேகமாய்ப் பரவி வருகிறது.
அதேநேரத்தில், இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்திருந்தாலும், சீனாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஒமைக்ரானின் பிஎஃப்.7 துணை வைரஸ்கள் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை, குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 22) கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உருமாறிய புதிய வகை கொரோனா தமிழ்நாட்டில் இதுவரை இல்லை. இதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது. அதேநேரத்தில், சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், புதிய பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று (டிசம்பர் 22) நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி அறிவுரை
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்.
முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என மோடி தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அவதார் 2 வசூல்: இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!