புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராகவும் குடியரசுத் தலைவர் கட்டிடத்தை திறந்து வைக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று (மே 26) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2 வருடங்களில் ரூ.850 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனைப் பிரதமர் மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் பிரதமர் திறந்து வைக்க கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட 19 கட்சிகள் பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (மே 25) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற செங்கோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தான் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “அரசியலமைப்பு சட்டம் 79வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவரையும் இரு அவைகளையும் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரே நாடாளுமன்றத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர்.
பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.
அப்படி இருக்கும்போது புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, குடியரசுத் தலைவரின் மதிப்பைக் குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது.
இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது.
எனவே புதிய நாடாளுமன்றத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
மோனிஷா
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு!
இம்ரான் கான், அவரது மனைவி உட்பட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை!
அருமையான தீர்ப்பு