ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் விரைந்து நடத்த வேண்டும் என்றும் வட்டியில்லா கடன் திட்டத்தில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் இன்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடைபெற்ற போது, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வேண்டிய நிலையில், இன்னும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறாததால்,
அதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கலந்து ஆலோசித்தேன்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்திற்கு பெறக்கூடிய கடனுக்கான அடிப்படை பத்திரங்களுக்கு, ஒன்றிய அமைச்சரவையினுடைய ஒப்புதல் கிடைக்காததால் கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தேன்.
இந்த மாதத்திற்குள் ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்குவதாக, ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
அதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், இதுவரை 3,500கோடி மட்டுமே வழங்கியுள்ளார்கள்.
இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு அதிக தொகையை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
வறுமை கோட்டில் உள்ளவர்களை கண்டறிய வருமான வரித்துறை கர்நாடகாவில் தரவுகள் வழங்கியுள்ள நிலையில், தமிழகத்திற்கும் வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
இதன்மூலம் நகைகடன் தள்ளுபடி, மகளிர் உரிமை தொகை திட்டங்களை வறுமை கோட்டில் உள்ளவர்களுக்கு எளிதாக நிறைவேற்ற முடியும்.
NIMER திட்டத்தில் மதுரைக்கு ஆராய்ச்சி மையம் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். விரைந்து மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
”காலேஜ்ல கிளாஸை கட் அடிச்சிருக்கேன், ஆனா…”- பிடிஆர் சுவாரஸ்யம்!
அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?