பிடிஆர் ஆடியோ: ஆளுநரைச் சந்திக்கும் பாஜக!

அரசியல்

பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக இன்று (ஏப்ரல் 23) பாஜக தலைவர்கள் குழு தமிழக ஆளுநரைச் சந்திக்கவுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் உலா வருகிறது. அதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார்கள் என்று கூறுவது இடம் பெற்றுள்ளது.

இந்த ஆடியோ விவகாரம் திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அடையாளம் தெரியாத நபருடன் நான் பேசுவது போல சமூக ஊடகங்களில் பரவும் ஆடியோ போலி என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் நான் பேசியதாக வெளியான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எனது நான்கு துறைகளுக்கான மானிய கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் என் மீது பல அவதூறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நான் கையெழுத்திடும் ஒவ்வொரு கோப்புகளுக்கும் ஒரு சதவிகிதம் கமிஷன் வாங்குவதாகச் சிலர் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் நான் எதிர்வினை ஆற்றவில்லை.

பொதுவெளியில் என்னை வில்லனாகச் சித்தரிப்பதில் தோல்வியுற்ற சிலர் தங்களது உத்திகளை மாற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்ற விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சூழலில் பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாகத் தமிழக ஆளுநரை பாஜக தலைவர்கள் குழு சந்திக்க இருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 23) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகச் சம்பாதித்ததாகப் பேசி இருந்த ஒலிநாடாவின் உண்மைத் தன்மையைச் சுதந்திரமான நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்திக்கவுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஒலிநாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால் அவர் அந்த ஒலிநாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல் ஒரு ஒலிநாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார்.

தமிழக நிதியமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்.

இரண்டு ஒலிநாடாக்களின் உண்மைத் தன்மையை நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும். காலம் காலமாகப் பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு தனது கட்சி தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திர கதைகளை வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்குத் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர்கள் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

மாமன்னனுக்காக தேதி மாற்றிய மாவீரன்

அம்ரித்பால் சிங் கைது!

Ptr palanivel thiyagarana Audio
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *