பிடிஆர் vs ஐ.பெரியசாமி: அமைச்சர்களிடையே கருத்து மோதல்!

Published On:

| By Kavi

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கள் சமீப காலமாக விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவர் கூட்டுறவுத் துறை பற்றி பேசியிருப்பது இரு அமைச்சர்களுக்கு இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மடீசியா அரங்கில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,

“கூட்டுறவுத் துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாகச் சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டுத் திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத் துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்பட்டுக் கடத்தல் அதிகரிப்பதாகப் பல செய்திகள் வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்களை முழுமையான கணினி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுகிறது. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்குச் செல்வதில்லை.

நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகள் எனக்குத் திருப்திகரமாக இல்லை.

எனது தாத்தா மற்றும் தந்தை கூட்டுறவுச் சங்கங்களில் தலைவராக இருந்துள்ளனர். எனக்கு கூட்டுறவுத்துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது.

உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்” என கூட்டுறவுத் துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அவருக்கு நேற்று (நவம்பர் 18) பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “நாங்கள் செய்யும் வேலையால் 7 கோடி மக்களும், தமிழக முதல்வரும் திருப்தி அடைந்தால் போதும். வேறு யாரும் திருப்தி அடைய வேண்டிய அவசியமில்லை” எனக் கூறினார்.

மேலும் அவர், ”நாங்கள் வெளிப்படத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கு தவறு, குறை இருக்கிறது என்று அவரை கேளுங்கள். குறை இருந்தால் சொல்லுங்கள், மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம்.

குறையை நீங்கள் சொன்னால், நாங்கள் சந்தோசப்படுவோம். மக்கள் தான் திருப்தி அடைய வேண்டும். ரேஷன் கடையைப் பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை” என்று குறிப்பிட்டார்.

“நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டுக் காலம் அரசியலில் இருக்கிறார்.

ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் சுயநலத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும் உடன் இருந்தார்.

தமிழக அமைச்சரவையின் இரு முக்கிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் கருத்து மோதல் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக நிதியமைச்சர் குற்றம்சாட்டும் கூட்டுறவுத் துறையின் மத்திய அமைச்சராக அமித்ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

பிரியா மரணம்: களமிறங்கும் தனிப்படை!

பாகிஸ்தானுக்கு உளவு: சிக்கிய வெளியுறவுத் துறை பணியாளர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment