நிதித்துறை அமைச்சராக இருந்து தற்போது தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக செயல்பட்டுவரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “உற்பத்தி திறனை வைத்து தான் கடனை மதிப்பிட வேண்டும். கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் நாம் இருந்தோம். 2014 முதல் 2021 வரையிலான ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால், நாமும் கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் இருந்திருப்போம்.
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல் சரி. கடன் அளவு மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப தான் இருக்கும். நிர்மலா சீதாராமன் சொன்ன நம்பரில் தவறில்லை.
மகாராஷ்டிரா மட்டும் தான் தமிழகத்தை விட உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம். அவர்களுக்கு கடன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்கள் நிதியை சிறப்பாக கையாள்கிறார்கள்.
தமிழகத்தில் யார் ஆட்சியாலோ பொருளாதாரத்தில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு 27 சதவீத கடன் இப்போது நமக்கு இருக்கிறது.
பாஜக ஆட்சி வந்த பிறகு மத்திய அரசினுடைய கடன் 60 சதவீதமாக இருக்கிறது. யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? தகவல் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மை.
அரசியல் ரீதியாகவோ, உற்பத்தி அடிப்படையிலோ ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது புரியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, 4 மாதமாக அமைச்சர் பி.டி.ஆர். பேசாமல் இருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்த கருத்து குறித்த கேள்விக்கு, “வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவது சரியல்ல. எந்த துறையில் இருக்கிறேனோ, அதற்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ, அதை அறிந்து பேசுவது தான் விதிமுறை, நாகரீகம்.
நான் 2021ல் அமைச்சரான போது எனக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்தன. அந்த அடிப்படையிலும் அவ்வப்போது பேசினேன். நிதித்துறை, ஓய்வூதியத்துறை, வளர்ச்சி திட்டமிடுதல் துறை, மனித வள மேலாண்மை துறை என இத்தனை துறைகளுக்கு அமைச்சராக இருந்ததால் தத்துவ ரீதியிலும், மேலாண்மை ரீதியிலும் பங்கு வகித்ததால் அடிக்கடி பேசினேன்.
தத்துவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்கையையும், திறனையும் செயல்பாட்டையும் விளக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அமைச்சர் இலாகா மாற்றிய பிறகு இன்று ஐடி பத்தியோ டிஜிட்டல் சேவை பற்றியோ தான் நான் பேசுவேன்.
நிதித் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் பேசுவது தான் மரபு, நாகரீகம்” என்று பதிலளித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பெயர் மாறும் ஐபிசி: அமித் ஷா மசோதாவுக்கு ஸ்டாலின் கண்டனம்!
கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!