“இந்த ஸ்லோகன்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும்”: பழனிவேல் தியாகராஜன்

அரசியல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், வணிகவரித்துறை ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

கூட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், “2020-21 தணிக்கை அறிக்கையின் படி சுமார் 4,230 கோடி ரூபாய் இன்று ரிலீசாகியுள்ளது. இன்னும் 2021-22க்கான இழப்பீடு வர வேண்டும். 2022-23ஆம் ஆண்டில் மூன்று மாதத்துக்கான இழப்பீடு வர வேண்டும்.

இன்று ஒரு முக்கிய விவாதம் நடைபெற்றது. Appellate Tribunal எனப்படும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்க வேண்டுமா?. ஒன்றிய அளவில் இருக்க வேண்டுமா?. அதில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும்? எந்தெந்த தேர்வு குழு இருக்க வேண்டும் என்று நீண்ட விவாதம் நடைபெற்றது.

இதற்காக அமைக்கப்பட்ட துணைக்குழு போட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு சுமார் 12, 13 மாநிலங்கள், இத்திட்டம் சரியில்லை என கூறி எதிர்ப்புத் தெரிவித்தன.

மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம் செய்வதில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கையை ஏற்கவில்லை. அதனால் 2,3 மணி நேரம் விவாதம் நடந்து திருத்தங்களை ஏற்றுக்கொண்டு நிறைவுக்கு வரக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஒப்புதல் பெறவில்லை.

ptr palanivel thiyagarajan gst meeting

இதுதொடர்பான சில புள்ளி விவரங்களை மாநிலங்களுக்கு அனுப்பி அதன் பிறகு ஒப்புதல் பெற இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதுமுக்கியமான ஒரு முன்னேற்றம். ஏனென்றால் இந்த தீர்ப்பாயம் இல்லை என்றால், தவறாக வரி விதிக்கப்படுகிறது என நினைக்கும் தனி நபரோ, அல்லது நிறுவனமோ, குழுமங்களோ நேராக உயர் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது.

இதை மாற்றி தீர்ப்பாயத்துக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டால் வேலைகள் எல்லாம் எளிதாக நடக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று ஸ்லோகன் வைத்து அரசியல் செய்வது சுலபம். அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்காக தேவையான திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஒரு வாரத்துக்கு முன்னதாக சென்னையில் உள்ள என் வீட்டுக்கு வந்தார்.

அப்போது ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று சொன்னார். நான் கேட்டேன், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று இருக்க வேண்டுமானால், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பில் எதற்கு இத்தனை சட்டசபை இருக்கிறது, ஒரே நாடு ஒரே சட்டமைப்பில் எதற்கு இத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வணிக வரித்துறை தனி தனியாக வைத்திருக்கிறோம். வணிக வரி சட்டதிட்டங்களை வகுக்குகிறோம், அதை மாற்றுகிறோம்.
எனவே ஸ்லோகன் வைத்து பேசுவது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டுக்கு சரி வராது. கூட்டாட்சித் தத்துவத்தில் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என்றளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால் தான் உண்மையிலேயே ஒரே நாடு ஒரே வரியை செயல்படுத்த முடியும்” என்றார்.

பிரியா

கொரோனா விடுமுறை : அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழ்நாடு அரசு

மெக்கலத்தின் பிரம்மாண்ட சாதனை : தட்டி பறித்த பென் ஸ்டோக்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *