மத்திய அரசிற்கு சாதகமான திட்டங்களை சமூகநலத் திட்டங்கள் என்றும் சாதகமில்லாதவற்றை இலவச திட்டங்கள் என்றும் மாற்றிக்கொள்கின்றனர் என தமிழக நிதியமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இலவச திட்டங்கள் தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் நேற்று(அக்டோபர் 6) வெளியான செய்தியில், “இலவச உணவு தானிய திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால், உணவு மானிய திட்டத்திற்கு ரூ. 2.07 லட்சம் கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த முடிவால் அரசிற்கு கூடுதலாக ரூ.44,762 கோடி செலவாகும்.
இந்த கூடுதல் செலவினங்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 6.4 சதவிகிதத்தைத் தாண்டி நிதிப்பற்றாக்குறையை அதிகரிக்கலாம்.
கொரோனா தொற்றிற்கு பிறகு நாட்டில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பசியால் வாடுபவர்களுக்கு உணவளிப்பது என்பது அரசினுடைய கடமை என்பது ஆரோக்கியமான கருத்து.
மத்திய அரசு சமூக நலத்திட்டங்களை தொடங்குவதற்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை நடத்தியபோது, பல மாநில அரசுகளும் இதைத்தான் தெரிவித்தன.

சமூக நீதிக்கான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு இலவசம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்தது. இலவச சீருடை, உணவு, மடிக்கணினிகள் இலவசங்கள் அல்ல.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது பொருளாதாரத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நீதியை அனைத்து மக்களுக்கும் நிலைநாட்டும் வகையில் சமூக நலத்திட்டங்களை மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசுக்கு சாதமாக இருந்தால் அது சமூக நலத்திட்டம். அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றால் இலவசம் என்கிறார்கள்.
பாசாங்குத்தனத்தின் உச்சமாக உணவு தானிய திட்டத்திற்கு ரூ.44,762 கோடி கூடுதலாக செலவாகியுள்ளது.
அனைத்து கட்சிகளிடமிருந்து இலவசம் குறித்தான உள்ளீடுகளை பெறுவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்த தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து யாராவது சொல்லுங்கள்.
இலவசம் தொடர்பான வழக்கின் போது இந்த நிலைப்பாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் முற்றிலுமாக விலகியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலவசங்கள் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் அறிவிக்கும் இலவசங்களின் நிதி நம்பகத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
செல்வம்
”யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும்” – சசிதரூர்
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்!