நாங்கள் ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் : வைரலாகும் பிடிஆரின் பேச்சு!

அரசியல்

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

“மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருக்கிறது. அது நாட்டுக்கு ஆபத்தானது” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

மேலும் தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி  பா.ஜ.கவின் வழக்கறிஞர்  அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் பல்வேறு ஊடகங்களிலும் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இது பற்றி விவாதிக்க நேற்று இந்தியா டுடே நிறுவனம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விவாதத்திற்கு அழைத்து இருந்தனர். இலவசங்கள் அல்லது நலத்திட்டம்: யார் முடிவு செய்வது? என்ற தலைப்பில் நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிடிஆரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது, ’இலவசங்கள் காரணமாக மக்களின் திறன் வளராது என்று மோடி கருதுகிறார். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். எனவே இதற்கு மாறாக அவர்களின்  திறனை,  திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதாக பிரதமர் மோடியின் கருத்து இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,

“ஒன்று, இதற்கு சட்ட பின்புலம் இருந்து அதனால் நீங்கள் சொன்னால், நாங்கள் ஏற்று கொள்ளலாம். அல்லது நீங்கள் சிறப்பு வல்லுநராக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் அல்லது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது உங்களிடம் இருக்க வேண்டும்.

அல்லது நீங்கள் பொருளாதாரத்தை அற்புதமாக முன்னேற்றி, கடனைக் குறைத்துள்ளீர்கள் அல்லது தனிநபர் வருமானத்தை அதிகரித்துள்ளீர்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளீர்கள் என செயல் திட்ட சாதனை எதாவது இருந்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்..

இதில் எதுவுமே உண்மை இல்லாத போது, நாங்கள் ஏன் யாரோ ஒருவரின் கருத்தை கேட்க வேண்டும்.

அவர்களின் வார்த்தை என்ன பொன்மொழியா? அல்லது கடவுளின் சொல்லா?. நான் கடவுள் நம்பிக்கை உடையவன், ஆனால் எந்த மனிதரையும் கடவுள் என்று நினைக்காதவன்..

பிறகு நான் ஏன் யாரோ ஒருவரின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?  

ptr palanivel thiagarajan

தேர்தல் வெற்றி எனக்கு அந்த உரிமையைக் கொடுத்து இருக்கிறது, என்னுடைய முதலமைச்சர் எனக்கு ஒரு வேலையைக் கொடுத்து இருக்கிறார்.அதை நான் ஒன்றிய பாஜக அரசை மிஞ்சுகிற வகையில் சிறப்பாக செய்து வருகிறேன்.

உறுதியாக சொல்கிறேன் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

நாங்கள் தான் ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறோம். நாங்கள் செலுத்தும் 1 ரூபாய் வரியில் எங்களுக்கு 30, 33 பைசாக்கள் கூட திரும்ப கிடைப்பதில்லை, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

பிறகு எந்த அடிப்படையில் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?  உங்களிடம் அரசியலமைப்பு அடிப்படை உள்ளதா?  இல்லை நீங்கள் நிதித்துறை வல்லுநரா ? இல்லை நோபல் பரிசு பெற்றவரா?  இல்லை எங்களை விட நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்களா? அதுவும் இல்லை.

பிறகு எந்த அடிப்படையில் உங்களுக்காக எனது கொள்கையை நான்  மாற்ற வேண்டும்?  இது என்ன பரலோகத்தில் இருந்து வரும் கூடுதல் அரசியலமைப்பு கட்டளையா?  நீங்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இந்த விவாதத்தின் போது எந்த அடிப்படையில் மாநில அரசின் கொள்கைகளை மாற்றக் கூறுகிறீர்கள்? என்றும் மத்திய அரசுக்கு எதிராக காட்டமாக கேள்வி எழுப்பினார்.

நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜனின் இந்த வாதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

க.சீனிவாசன்

உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி – தமிழகம் எதிர்த்தது – பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

+1
0
+1
2
+1
0
+1
11
+1
1
+1
0
+1
0

1 thought on “நாங்கள் ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் : வைரலாகும் பிடிஆரின் பேச்சு!

  1. Whatever they are telling, all are just to divert the major issues such as dollar value, unemployment, petrol-gas price hikes etc., Dear Sri Honble FM of TamilNadu, please carry on Sir. We all are behind with Our CM of Tamilnadu. Don’t worry Sir…

Leave a Reply

Your email address will not be published.