ஸ்ரீராம் சர்மா
சங்க கால காட்சி ஒன்று !
சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த பண்ணன் என்பான் அக்காலத்தில் பெருங் கொடையாளியாக திகழ்ந்தவன். தான் கொண்டதை இல்லாதோருக்கு அளித்து அளித்தே நெடுங்கீர்த்தி கொண்ட பெருமகன் !
பண்ணனிடம் பெற்ற மூட்டைகளை சுமந்து கொண்டு நகரும் மக்களின் வரிசை – மழைக்காலத்துக்கு முன்பு எறும்புகள் முட்டைகளைச் சுமந்து கொண்டு மேட்டு நிலம் நோக்கி நகர்வது போன்று காணப்பட்டதாக பருந்து பார்வை கொண்டு சிலிர்த்து வர்ணிக்கிறது சங்கத்தமிழ் !
ஏழைகளின் பால் அவன் கொண்ட கருணையைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த சோழ மன்னன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்…
“சிறுகுடி பண்ணா என் வாழ்நாளையும் நீயே எடுத்துக் கொள். உன் தொண்டு வாழ்க, வளர்க” என்றான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய ! என வணங்கி வாழ்த்தினான் என்கிறது புறநானூறு.
அன்றந்த ஆறாம் நூற்றாண்டில் திருவீழிமிழலை பஞ்சத்தில் வீழ்ந்தபோது
திருஞானசம்பந்தரும் – திருநாவுக்கரசரும் போட்டி போட்டுக் கொண்டு காசு பெற்று ஊர்மக்களின் இல்லாமையை நீக்கியதாக சைவ சித்தாந்தம் விரித்துரைக்கிறது.
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்
காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணிநடுக்குற்றோர்
யாவரும் வருகேன்று இசைத்து உடன் ஊட்டி
உண்டுஒழி மிச்சில் உண்டு ஓடுதலை மடுத்துக்
கண்படை கொளும் காவலன் தான்என்
எனத் தமிழ் மண்ணின் தர்ம சிந்தனையை உச்சி முகர்கிறது மணிமேகலைக் காப்பியம் !
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ! என்பதும் புறநானூறுதான் !
திராவிடத் தமிழ்த்திரு மண்ணின் நெடிய வரலாறு இவ்வாறு இருக்க…
“மானியங்களையும் ,இலவசங்களையும் இனி நிறுத்திக் கொள்வது நலம்” என ஒன்றிய திசையிலிருந்து சில குரல்கள் ஒலிக்க,
“வளர்ந்த மாநிலமான எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியும் ! எங்களுக்கு உங்கள் அறிவுரை தேவையில்லை” என எகிறி அடித்தார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
இலவசங்கள் மனிதர்களை சோம்பேறிகளாக்குகிறது, நாட்டைப் பின் தள்ளுகிறது என்கிறது அந்தத் தரப்பு. அந்த அறிவுலக பசப்புகளெல்லாம் வேண்டாம். மனம் கொண்டு மக்களைப் பாருங்கள் அல்லது சட்டப்படி அதற்கு முகாந்திரம் உண்டா என்றாவது சொல்லுங்கள் என்கிறது தமிழகத் தரப்பு !
புண்ணியவான் ஒருவரால் உச்சநீதி மன்றத்துக்கு வழக்கு சென்றிருக்கிறது.
தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் அதில் தங்களையும் இணைக்கக் கோரி திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
எதுதான் நியாயம் ? பார்க்கலாம் !
நான் பட்டம் பெற்ற பொருளாதார வல்லுனன் அல்லன். சாதாரண சமூக எழுத்தாளன்தான். ஆனால், பலதரப்பட்ட மக்களோடு இறங்கி நெருங்கிப் பழகுபவன் என்பதால் இந்த சமூகத்தின் வலி எனக்குத் தெரியும். அந்தத் தகுதி போதும் இந்த கட்டுரையை தொடர்வதற்கு என நம்புகிறேன். தொடர்கிறேன்…
“பசித்தவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கும் தூண்டிலைக் கொடுங்கள்” எனும் ஜப்பானியப் பழமொழியை சொல்லிக் காட்டுபவர்கள்…
“மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ளும் வரை அவன் பட்டினி கிடக்க வேண்டுமா ?” எனக் கேட்டால் நல்ல பதில் சொல்ல மாட்டார்கள்.
கவனியுங்கள்.
மக்கள் தொகை பெருத்திருக்கும் இந்த நாட்டில் அனைவருக்கும் வேலை கொடுத்துவிட அரசாங்கத்தால் முடியாது. தனியார்களாலும் அது முடியாது.
பூ கட்டுவது , பழ வியாபாரம், காய்கறி வியாபாரம் செய்வது முதல் செல்ஃபோன் ரிப்பேர் செய்வது வரை சுயவேலை செய்து பிழைக்கும் சாமானிய மனிதர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம்.
அதில், தன்னிறைவு அடையாதவர்களின் கதி என்ன ? ஏறிவரும் விலைவாசியை எதிர்கொள்ள முடியாத ஏழைகளின் நிலை என்ன ? அதுபோக, சுய தொழிலுக்கும் வாய்ப்பில்லாமல் அல்லாடும் அப்பாவி மக்களின் கதிதான் என்ன ?
அந்தக் காலம் தொட்டு கோயில்களில் அன்னதானம் செய்வதன் நோக்கம் என்ன ? என்னிடம் பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதை வைத்து பசித்தவர்களுக்கு சோறிட்டு புண்ணியம் தேடிக் கொள்கிறேன் என்பதுதானே ?
அந்த தர்ம சிந்தனையை அனைவருக்கும் வலியுறுத்தி வசதி உள்ளவர்களிடம் இருந்து வரியைப் பெற்று அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வழிவகைதானே மானியங்களும் – இலவசங்களும் !? அதைத்தானே தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்கிறார். அதைக் குற்றம் சொல்பவர்களை எந்த தராசில் நிறுத்திப் பார்ப்பது ?
இலவசங்களையும் மானியங்களையும் மட்டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டும் ஏழைகளை – அன்றாடங்காய்ச்சிகளைப் பற்றி அவர்கள் கவலை கொண்டதாக தெரியவில்லையே.
ரேஷனில் கொடுக்கப்படும் மானியப் பொருட்களும் போதாத நிலையில், வீடு வீடாக சென்று “அக்கா உங்களிடம் ரேஷன் அரிசி மிச்சமிருக்கிறதா…? அண்ணே, உங்கள் தேவைக்குப் போக எண்ணை ஒரு லிட்டர் கிடைக்குமா…?” என மன்றாடிக் கேட்டுக் குடும்பம் நகர்த்தும் ஏழைத் தாய்மார்களின் அல்லாடலை அவர்கள் கொஞ்சமேனும் அறிவார்களா ?
பெரும் பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர வர்கத்தினருக்கும் எந்தக் கவலையுமில்லை. அந்த வர்க்கம் கொண்ட லாபமும், மாதச் சம்பளமும், பென்ஷனுமாக காலம் தள்ளிவிடும். பேங்க் பேலன்ஸை வைத்துக் கொண்டு பெரும்பேச்சு பேசும்.
இல்லாதோர்க்கு ஆதரவாக அரசாங்கம் பேசாமல் வேறு யார் பேசக் கூடும் ?
பசி முற்றி அடிவயிறு காய்ந்தால் உறுமி எழுந்து உள்ளுக்குள் மட்டுமே கேட்குமே ஒரு கோர ஓசை. தன்னிரக்கம் சுமந்த அந்தக் கொடும் ஓசையை மேட்டுக்குடி அறியுமா !?
இலவசங்கள் மற்றும் மானியங்களின் நோக்கம் – சொந்த மக்களது வாழ்க்கையின் தோள்களை ஆதூரமாக தட்டிக் கொடுப்பதாகும்.
“உன்னால் மேலே எழுந்து வந்துவிட முடியும். அதுவரை என் விரல்களைப் பற்றிக் கொள்…’ எனும் பேரன்பு சுமந்த மானுட அக்கறைதான் அது. அந்த முன்னெடுப்பு ஜனநாயக அரசாங்கத்தின் பெருங்கடமையும் ஆகிறது !
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இந்த நாட்டிலே அடிப்படை வசதி கூட கிடைக்காது போனால் எளியோரின் மனம் குமுறாதா ? கொந்தளிக்காதா ?
பசித்தவன் பார்த்துக் கொண்டிருக்க பலகாரங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு காதுக்கும் காதுக்குமாக வாயகட்டித் திண்பது நாகரீகக் கொச்சையல்லவா ?
விவசாயிகளுக்கு மானியம் எதற்கு எனக் கேட்பவர்கள் –
தூரத்தில் கவிந்து வந்த கருமேகக் கூட்டங்கள் விதைத்த வயலுக்கு மேலே மழைக்குறி தப்பிக் கடந்து போகும் அந்த நேரம் ஏழை விவசாயி கண்ணில் பனித்துத் தெரியும் ஆற்றாமை சுமந்த அலறலை அறியாதவர்கள் !
மக்களுக்கு இலவச மின்சாரம் எதற்கெனக் கேட்பவர்கள் –
மண்ணெண்ணை அடுப்பை காதோரம் உயர்த்தி உலுக்கி, உள்ளே குலுங்கும் சத்தம் இன்னும் கொஞ்சம் கேட்காதா என ஏங்கும் ஏழைத் தாய்மார்களின் குடும்ப வலி அறியாதவர்கள் !
மானியங்களையும் – இலவசங்களையும் நிறுத்திவிட்டு அந்தப் பணத்தில் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம்தான். ஆனால், கட்டமைக்கப்பட்ட அந்தப் பளபள சாலையில் நடந்து போக நல்ல மனிதர்கள் இங்கே உயிரோடு இருக்க வேண்டுமல்லவா ?
மாபெரும் பண முதலைகளுக்கு 30 சதவிகித வரியை 20 சதவிகிதமாக குறைப்பது அவர்களை உற்சாகப்படுத்தத்தான் எனில், அதில் நியாயம் உண்டு எனில், இல்லாதவர்களுக்கு மானியம் கொடுத்து கொஞ்சம் இலவசங்களையும் கொடுத்து மேலேறி வாருங்கள் என உற்சாகப்படுத்துவதும் நியாயம்தான் !
அந்த தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது நிதியமைச்சர் பி.டி.ஆர் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கிறார்…
எனது முதலமைச்சர் என்னிடம் பணி ஒன்றை ஒப்படைத்துள்ளார். அதைத் திறம்படச் செய்து கொண்டிருக்கிறேன். மானியங்கள் – இலவசங்களைக் கொடுத்த பின்பும் எங்கள் மாநிலம் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து தானே இருக்கிறது. எங்கள் தனி நபர் வருமானத்துக்கு என்ன குறைச்சல் இங்கே ? மக்கள் கொடுத்த ஆதரவில் ஆட்சியில் இருக்கும் நாங்கள் மக்களுக்கு திரும்ப செய்வதை தடுக்க உங்களுக்கு சட்டபூர்வமான அதிகாரம் எங்குள்ளது ? எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் சாதித்து விட்டதுதான் என்ன ?
எங்களிடம் இருந்து ஒரு ரூபாய் சென்றால் அது 33 அல்லது 35 பைசாவாகத்தான் திரும்ப வருகிறது. அதற்கும் மேல், இப்படித்தான் செய்ய வேண்டும் என எங்களுக்கு அறிவுரை சொல்வது ஜனநாயக அத்துமீறலல்லவா ? என்றார் !
கொஞ்சம் சூடாகத்தான் கேட்டுவிட்டார் பிடிஆர். அதனை Intellectual Arrogance என்கிறார்கள் சிலர்.
ஆம், பெருந்தனக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், தர்ம சிந்தனை கொண்ட பரம்பரையில் – ஏழைகளின் வலியறிந்து வந்த நிதியமைச்சர் அப்படித்தான் பேசுவார்.
“குடி உயர கோன் உயர்வான்” என்றார் ஔவைப் பிராட்டியார்.
தன் குடிகளை முன் வைத்தே நகர்ந்தாட்சி செய்கிறார் நமது முதலமைச்சர். அவரது கொள்கையை மனதார வழிமொழிவது நமது கடமையாகிறது !
முடிவாக, மானியங்களும் – இலவசங்களும் தேவைப்படாத அளவுக்கு மக்கள் உயர்ந்தாக வேண்டும் என்பது சரிதான். ஆனால், அந்தக் காலம் வரும்வரை பசித்த முகம் பார்த்துக் கொண்டிருக்க வள்ளலார் வாழ்ந்த இந்த மண் கிஞ்சித்தும் சம்மதிக்காது !
சொல்லுங்கள்,
ஈரமற்ற அறிவு இருந்தென்ன பயன் !?
சிறப்புக் கட்டுரை: தமிழகம் – கலைகளின் தாயகம்!
கட்டுரையாளர் குறிப்பு
எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
சிறப்புக் கட்டுரை: தகத்து எரியுதே தமிழ்ப் பகை !
அது சரிங்க! சாராய ஆலை,சாராயக்கடை எல்லாம் எதுக்கு வச்சிருக்காங்க! ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பு!
Amazing write up, well said