மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று (மே 7) மாலை நடைபெற உள்ள திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுவார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
பிடிஆர் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோக்கள் தமிழக அரசியலிலும் திமுகவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஆடியோக்கள் என்றும் தன்னையும் முதல்வரையும் பிரிக்க நினைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.
ஆடியோ விவகாரத்தில் பிடிஆரை முதலில் ரிசைன் பண்ண சொன்ன ஸ்டாலினிடம் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள், “பிடிஆரை ரிசைன் பண்ண வச்சா அது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி ஆகிடாதா? இன்னும் சில ஆடியோக்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே” என்றெல்லாம் பேசியதால் முதல்வர் சற்று கோபம் தணிந்தார்.
இந்தசூழலில் தான் முதல்வர் ஸ்டாலினை மே 1-ஆம் தேதி அவரது இல்லத்திற்கு சென்று பிடிஆர் சந்தித்தார். மே 2-ஆம் தேதி உங்களில் ஒருவன் வீடியோவில் பிடிஆர் ஆடியோ சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “இதுதொடர்பாக பிடிஆரே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளார். மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார். அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் பிடிஆர் கலந்து கொண்டார்.
இதன்மூலம் பிடிஆர் ஆடியோ சர்ச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் பிடிஆர் மீதான அவரது கோபம் குறைந்திருக்கிறதே தவிர மறையவில்லை என்றும் மே 5-ஆம் தேதி பிடிஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் ஆடியோ வரை: சர்ச்சை தொடங்கி முடிந்த பின்னணி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மே 3-ஆம் தேதி முரசொலியில் அறிவிப்பு வெளியானது.

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் வ.து.ந.ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ந.ரகுபதி, சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு ச.முத்துசாமி, ஜீவா நகர் பகுதியில் ப.ஆ.சரவணன், பெத்தாணியபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை ராமர் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டது.
ஆடியோ விவாகரத்திற்கு பிறகு பிடிஆர் ஏறும் முதல் மேடை என்பதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மாலை சிம்மக்கல் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று முரசொலியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பிடிஆர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை செய்ய ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக மே 5-ஆம் தேதி அமைச்சரவை மாற்றம்…திமுகவுக்குள் திடீர் பஞ்சாயத்துகள் என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் நிதியமைச்சர் பிடிஆர் மீதான கோபம் முதல்வருக்கு குறைந்திருந்தாலும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. அந்த அடிப்படையில் நிதியமைச்சர் பொறுப்பை சீனியர் அமைச்சர்களான புதுக்கோட்டை ரகுபதி, ஈரோடு முத்துசாமி இருவரில் ஒருவருக்கு கொடுக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது என தெரிவித்திருந்தோம்.
இந்த்நிலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பிடிஆர் பெயர் அறிவிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்