தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 1) நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்துள்ளார். நாளை மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக கடந்த ஏப்ரல் 19, 25 ஆகிய தேதிகளில் வெளியான ஆடியோக்கள் திமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
அந்த ஆடியோவில் உதயநிதி, சபரீசன் ஆகியோர் பற்றிய சர்ச்சைக்குரிய உரையாடல்கள் இருந்தன.
இந்த இரு ஆடியோக்களையும் பிடிஆர் திட்டவட்டமாக மறுத்தார். தொழில்நுட்ப ரீதியாக செய்யப்பட்ட மோசடி என்றும் அவர் விளக்கம் கொடுத்தார்.
பிடிஆர் குறித்த ஆடியோக்களை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த நிலையில் பிடிஆர் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் அதை பிடிஆர் ஏற்கவில்லை. கடந்த 25 ஆம் தேதி இரண்டாவது ஆடியோ வெளியான மாலையே முதலமைச்சர் ஸ்டாலினுடைய வீட்டுக்கு சென்றார் அமைச்சர் பிடிஆர்.
ஆனால் அப்போது பிடிஆரிடம் முதலமைச்சர், ‘ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என கோபமாக பேசி அனுப்பினார். ஆனால் அதை ஏற்காமல் மறுநாள் வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்தார் நிதியமைச்சர்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள், ‘பிடிஆரை ரிசைன் பண்ண வச்சா… அது பிஜேபிக்கு கிடைத்த வெற்றியாகிடாதா?,
இன்னும் சில ஆடியோக்களை அவர்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
அதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் விஷயத்தில் சற்று கோபம் தணிந்ததாக திமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இன்று (மே 1) காலை முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர்.
அமைச்சரவை கூட்டத்தில் வைக்க வேண்டிய சில அஜெண்டாக்கள் தொடர்பாக நிதியமைச்சர் என்ற முறையில் முதலமைச்சரிடம் பிடிஆர் ஆலோசித்ததாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
–வேந்தன்
2026ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பேட்டி!
ரஜினியை விமர்சித்த ரோஜா… கொந்தளித்த சந்திரபாபு நாயுடு