உதயநிதி ஸ்டாலின், சபரீசன் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவிய ஆடியோ கிளிப் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஆடியோ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி உதயநிதி, சபரீசன் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்துவிட்டனர் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக 28 நொடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டிஎம்கே ஃபைல்ஸ் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆடியோ உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினோ, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனோ இந்த ஆடியோ குறித்து எந்தவிதமான கருத்தையும் கூறவில்லை.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வருடைய மருமகன் சபரீசன் இந்த ஆடியோ வெளியானதும் பிடிஆரை தொடர்புகொண்டு கேட்டதற்கு இது உண்மையான ஆடியோ இல்லை என்று பிடிஆர் கூறியுள்ளார். இதற்கு சட்டநடவடிக்கையோ அல்லது விளக்கமோ அளியுங்கள் என்று சபரீசன் பிடிஆரிடம் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில்தான் பிடிஆர் இந்த ஆடியோ கிளிப் குறித்து இன்று (ஏப்ரல் 22) விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கையில், “நிதி அமைச்சராக பதவி வகிப்பதால் சமூக வலைதளங்களில் அதிக நேரம் என்னால் செலவிட முடியவில்லை. முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதால் தான் என்னுடைய திமுக ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தேன்.
மார்ச் 20-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறேன். நான் பேசியதாக வெளியான இட்டுக்கப்பட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எனது நான்கு துறைகளுக்கான மானிய கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தேன்.
இந்திய ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு ஆதரவாளராக நான் உள்ளேன். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்காக நான் இதுவரை காவல்துறையில் யார் மீதும் புகார் கொடுத்ததில்லை. அவதூறு வழக்கு பதிந்ததில்லை. என்னுடைய இறந்த மூதாதையர்களைப் பற்றி அவதூறு பரப்பியபோது ஒருமுறை நான் வழக்கு தொடர்ந்தேன். ஆனாலும் அந்த வழக்கை நான் பெரிதுபடுத்தவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் என் மீது பல அவதூறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக நான் கையெழுத்திடும் ஒவ்வொரு கோப்புகளுக்கும் 1 சதவிதம் கமிஷன் வாங்குவதாக சிலர் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுக்கள் எதற்கும் நான் எதிர்வினையாற்றவில்லை.
இந்த சூழலில் நான் பேசியதாக பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஆடியோ ஒன்று இணையதளங்களில் பரவியது. பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியுற்ற சிலர் தங்களது உத்திகளை மாற்றி அமைத்து அவதூறு பரப்புகின்றனர். பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு முக்கிய காரணம் எனது தலைவர் மு.க.ஸ்டாலின் தான். முதல்வரையும் என்னையும் பிரிக்கும் எந்த தீய நோக்கமும் வெற்றியடையாது என்பதை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள பிடிஆர் மேலும்…
“இந்த ஆடியோ நேர்மையற்ற சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் இதுபோன்ற மூன்றாம் தரப்பு தகவல்களை வெளியிடுகின்றனர். நான் பேசியதாக கூறப்படும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என்பதற்கான தொழில்நுட்ப பகுப்பாய்வை எனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளேன்.
எளிதில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட குரல் பதிவுகளை உருவாக்கலாம். வரும் நாட்களில் இதுபோன்ற வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகள் அதிகமாக வெளியாகும் என்பதில் நாம் ஆச்சரியப்பட தேவையில்லை.
பொறுப்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துபவர்களாக செயல்படவேண்டிய ஊடகங்கள் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள்.
பொதுவாழ்வில் மதிப்பிழந்த மூன்றாம் தர க்ளிக் பைட்டுகளை ஒளிபரப்புவதன் மூலம் ஆன்லைன் தளங்கள் தங்களது நிதித் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் இந்த ஆடியோவை ஒளிபரப்புவதன் மூலம் பாரம்பரிய ஊடகங்கள் தங்களது நம்பகத்தன்மையை இழக்கிறது.
மக்களை பாதிக்கும் முக்கியமான விவாதங்களை திசைதிருப்பவே இது வழிவகுக்கும். இதுபோன்ற தீங்கிழைக்கும் அவதூறுகளை நான் புறக்கணித்துவிடுவேன். அவதூறுகள் எல்லை மீறுவதாக அமைந்தால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். அத்தகைய நடவடிக்கைகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு விளம்பரத்தை தேடி தருவதாக அமைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர்.
செல்வம்