”மகனும், மருமகனும் தான் கட்சியே”அண்ணாமலை வெளியிட்ட பிடிஆர் ஆடியோ -2

அரசியல்

உதயநிதி, சபரீசன் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்துவிட்டனர் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக ஏப்ரல் 19 ஆம் தேதி 28 நொடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அந்த ஆடியோவை ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டிஎம்கே ஃபைல்ஸ் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆடியோ உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

பின்னர், அந்த ஆடியோ குறித்த விளக்கத்தை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்தார். அதன்படி, “நான் பேசியதாக பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஆடியோ ஒன்று இணையதளங்களில் பரவியது. பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியுற்ற சிலர் தங்களது உத்திகளை மாற்றி அமைத்து அவதூறு பரப்புகின்றனர்.

பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு முக்கிய காரணம் எனது தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.  முதல்வரையும் என்னையும் பிரிக்கும் எந்த தீய நோக்கமும் வெற்றியடையாது என்பதை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், ‘திமுக உள்ளிருந்து சிதைந்து வருகிறது திமுக மற்றும் பாஜக இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய நிதி அமைச்சருக்கு நன்றி’ எனவும் குறிப்பிட்டு,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 25) மீண்டும் ஒரு ஆங்கில உரையாடல் ஆடியோவை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சப் டைட்டிலோடு வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், ”ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இது தான்.

கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏ.க் களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர்…நிதி மேலாண்மை செய்வது சுலபம்…இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்…முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே…அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது.

எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால்…இப்போது நான் விலகினால்…இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்…எப்படி சொல்வது…

நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாதபோது அதை பற்றி கவலைப்பட வேண்டியது எனக்கு இல்லை” என்றபடி முடிகிறது அந்த ஆடியோ.

இது மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கார் விபத்து: யாஷிகா நீதிமன்றத்தில் ஆஜர்!

பொன்னியின் செல்வன் 2 வெளியீடு : புலம்பும் தியேட்டர் உரிமையாளர்கள்!

+1
1
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *