கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற மத்திய கல்வி நிலையங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி குழு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல் குழுவின் பரிந்துரைகள் குறித்து தி வயர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,
“அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு பரிந்துரையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக நம் தாய் மொழியை அடக்க நினைக்கும் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
திமுக அரசு இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லும். இந்தி மொழியை திணிப்பது சர்வதேச உயர் பதவிகளுக்கு போட்டியிடும் இந்தியர்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்தும்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது.
அவருக்கு இந்தி பேச தெரியாது என்பதை பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியை வளர்ப்பதற்காக மற்ற மொழிகளை நசுக்குகிறார்கள். இதற்கு முன்னாள் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்த போது,
1930 மற்றும் 1960-களில் இந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் உள்ள 35 பேரில் 21 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். பெரும்பாலான மத்திய அரசு தேர்வுகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள்.
பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுகிறது. மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிகளை ஏற்படுத்துவதில் பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது.
அதனை திசைதிருப்பவே இதுபோன்ற இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளில் பாஜக அரசு ஈடுபடுகிறது” என்றார்.
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை!