பிடிஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் வீடியோ வரை: சர்ச்சை தொடங்கி முடிந்த பின்னணி!

அரசியல்

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்  என்கிற பழனிவேல் தியாகராஜன் கடந்த ஏப்ரல் 19, ஏப்ரல் 25 ஆகிய நாட்களில் வெளியான இரு ஆடியோக்களின் மூலம் கடும் சர்ச்சைக்கு உள்ளானார்.

முதல் ஆடியோவில், ‘உதயநிதி, சபரீசன் ஆகியோர் இந்த ஆட்சியின் முதல் ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துவிட்டார்கள்’ என்று பிடிஆரின்  உரையாடலில் இடம்பெற்றிருந்தது. அப்போது சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை பணிகளில் இருந்த பிடிஆர் சட்டமன்றம் முடிந்த பிறகு ஏப்ரல் 22 ஆம் தேதி ஆங்கிலத்தில்  மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில் குரல் பகுப்பாய்வு சோதனையில் அது என் குரலே இல்லை என்று  மறுத்தார் பிடிஆர்.

இந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஆரின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டார். அதில், ‘நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற  கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். இந்த விஷயத்தில் பாஜக எனக்கு பிடித்த கட்சி.  திமுக தற்போது மகனிடமும், மருமகனிடமும்தான் இருக்கிறது’ என்ற ரீதியில் பேசியிருந்தார்.

இந்த இரு ஆடியோக்களும் தமிழ்நாடு அரசியலில் அதிர்வை ஏற்படுத்தின.  இந்த நிலையில் இரண்டாவது ஆடியோவுக்கு விளக்கம்  அளித்து வீடியோவை வெளியிட்டார் அமைச்சர் பிடிஆர். அதில்  உதயநிதியை செயல்வீரர் என்றும் சபரீசனை தன் வழிகாட்டி என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஏப்ரல் 21 ஆம் தேதி பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்,  சையது சஃபா இஸ்லாம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து, பிடிஆர் ஆடியோவை பிரஸ்மீட்டிலேயே  ஓடவிட்டு, ‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் நம்பிக்கையான அமைச்சர் பிடிஆர் பேசியதை கேளுங்கள். தமிழ்நாட்டை திமுக அரசு ஊழல் மயமாக்கி வருகிறது’ என்று குற்றம் சாட்டினார். 

தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள் அடங்கிய குழு ஏப்ரல் 23 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து பிடிஆர் ஆடியோ மீது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அடுத்த சில நாட்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, ‘பிடிஆர் ஆடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

எனவே இது தேசிய அளவில் முக்கியத்துவமானது.  பிடிஆர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று திமுக தலைமைக் கழக வட்டாரங்களே எதிபார்த்த நிலையில்…

ஏப்ரல் 19 ஆம் தேதி கிளம்பிய  இந்த ஆடியோ சர்ச்சைக்கு  மே 2 ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து வந்த உங்களில் ஒருவன் வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆடியோ முதல் மே 2 ஆம் தேதி முதல்வர் வீடியோ வரை  என்ன நடந்தது?

யார் இந்த பிடிஆர்?

நிதியமைச்சர் பிடிஆர்  தமிழ்நாட்டின் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்லர். அவர் பொருளாதார நிபுணராக உலக அளவிலான முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர். திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்த பிடிஆர் அதன் பின்  உயர் கல்வியை அமெரிக்காவில் படித்தார்.

முனைவர் பட்டத்தை  நியூயார்க் பஃபலோ பல்கலைக் கழகத்தில் பெற்றார்.  அமெரிக்காவின் மிக புகழ் பெற்ற நிறுவனமான லெஹ்மன் ப்ரதர்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2008 வரை அமெரிக்காவில் பணியாற்றிய பிடிஆர்., அதன் பின்  சிங்கப்பூரில்  ஸ்டேண்டர்டு சாட்டர்டு பேங்க் க்ளோபல் கேபிடல் மார்க்கெட் பிரிவில் பணியாற்றினார்.

1990 களில் இருந்து  2014 வரை இப்படி பல்வேறு உலகளாவிய நிறுவனங்களில் பணியாற்றிய பிடிஆர் 2016 இல்தான் தமிழ்நாட்டில் திமுக சார்பில் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினார்.

2021 இல் மீண்டும் வெற்றிபெற்ற பிடிஆர் திமுக ஆட்சியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாட்டு அரசியலில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் பிடிஆர்.

இதுமட்டுமல்ல இதுவரை தமிழ்நாட்டில் பதவி வகித்த மற்ற நிதி அமைச்சர்களை விட பல்வேறு உண்மைகளை உடைத்துப் பேசிவந்தார். ஆதாரபூர்வமாகவும், புள்ளி விவர ரீதியாகவும் பேசிய பிடிஆரின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூட  ரகசியமாக ரசித்தனர். தமிழ்நாடு நிதித் துறையில் பல்வேறு சீர் திருத்தங்களை செய்வதற்கு முனைந்த பிடிஆர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தனது கருத்துகளை எடுத்து வைத்தார்.

பிடிஆரை  குறிவைத்த அறிவுஜீவிகள்

உலகளாவிய பொருளாதார அறிவு பெற்ற பிடிஆர், திராவிட கொள்கைக் குரலுடன் தமிழ்நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதோடு… தமிழ்நாட்டின் மற்ற நிதியமைச்சர்கள் இதுவரை செய்யாத அளவுக்கு வீண் செலவுகளையும், கமிஷன் கலாட்டாக்களையும் நிறுத்துவதற்கு நிர்வாக ரீதியில் முயற்சி மேற்கொண்டார்.

பிடிஆருக்கு இந்திய ரிசர்வ் வங்கி தொடர்புடைய நிறைய பொருளாதார அறிஞர்கள் நல்ல நெருக்கம்.  டெல்லியில் பணியாற்றும்  எதிர்முகாமைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களும் பிடிஆருடன் பழகிவருகிறார்கள்.

இந்த பின்னணியில்தான் சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற பிடிஆரை  அறிவுஜீவிகள், பொருளாதார அறிஞர்கள் குழு ஒன்று தனிப்பட்ட முறையில்  பிரபல ஹோட்டல் ஒன்றில் சந்தித்து  உரையாட திட்டமிட்டது.

அவர்களில் ஆர்.எஸ்.,எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். பிடிஆருக்கு அறிமுகமான ஆங்கில பத்திரிகையாளர் மற்றும் பப்ளிக் ரிலேஷன் துறையைச் சேர்ந்தவர் மூலம் இதுகுறித்து பிடிஆரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் பொருளாதார கலந்துரையாடலில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்த சந்திப்புக்கு ஒப்புக் கொண்டார்.

முழுக்க முழுக்க தனிப்பட்ட அந்த சந்திப்பின் போது பிடிஆரின் பொருளாதார அறிவையும், ஆற்றலையும் பாராட்டித் தள்ளிய  அவர்கள், ‘நீங்கள் இந்தியாவுக்கே நிதியமைச்சராக இருக்க வேண்டியவர். ஒரு மாநிலத்தின் நிதியமைச்சராக உங்களை ஏன் சுருக்கிக் கொண்டீர்கள்?  உலக அளவிலான உங்கள் பொருளாதார அறிவு பாரதத்துக்கு பயன்பட வேண்டாமா?’ என்று பிடிஆரிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பிடிஆர் புன்னகைத்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பற்றி அவர்கள் சில கேள்விகளை கேட்க அதற்கு  கடகடவென பதில் அளித்திருக்கிறார்.

பிடிஆர் குடும்பமே மிகச் செல்வந்த குடும்பம். அதனால் அவருக்கு பணம் மீது பெரிய ஆர்வம் இல்லை.  ஆனால் பணத்துக்கு மயங்காதவர் கூட புகழ்ச்சிக்கு மயங்கிவிடுவார்கள்.  பிடிஆரின் குடும்பம் நீதிக் கட்சி  அரசியல் பாரம்பரியம் கொண்டது போலவே மிகச் சிறந்த ஆன்மீக பாரம்பரியம் கொண்டதுமாகும்.

இப்படிப்பட்ட பின்னணியை கொண்ட  பிடிஆரை தேசிய அரசியல்  நீரோட்டத்துக்கு அழைத்து வரலாமோ என்பது அந்த கலந்துரையாடலில் பங்கேற்ற சிலரின் எண்ணம்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பிடிஆர்.  தனது தாத்தா காலத்தில் இருந்து நீதிக் கட்சி  பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  இந்த சந்திப்பில்தான் தன்னைப் பற்றியும், தான் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் பற்றியும், ஆனால் அவற்றை வேகமாக செய்ய முடியாத நிலைமை பற்றியும் மனம் விட்டு பல விஷயங்களை பேசியிருக்கிறார் பிடிஆர். அவைதான் மிக தந்திரமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

புதிய நிதியமைச்சர் தேடுதல்!

ஏப்ரல் 19 ஆம் தேதி ஆடியோ வெளியானது அதன் பின் 22 ஆம் தேதி பிடிஆர் மறுப்பு விளக்கம் அளிக்க….இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு உளவுத்துறையிடம் இதுகுறித்து விசாரித்து முழுமையான தகவல்களை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

உளவுத்துறை  இதுபற்றி விசாரித்தது.  அது பிடிஆரின் குரல்தான் என்றும்,  எந்த சூழலில் யாரிடம் எங்கே பேசினார் என்ற விவரங்களையும் சேகரித்து முதல்வரிடம் கொடுத்தனர்.

ஏற்கனவே ஐபியில் பணியாற்றி தற்போது மாநில உளவுத்துறையில் இருக்கும்  டெக்னிக்கல் அறிவு நிறைந்த அதிகாரிதான் பிடிஆரின் ஆடியோ உண்மை என  குறிப்பிட்டுள்ளார்.   ஆடியோவில் இருப்பது பிடிஆரின் குரல்தான் என்று அறிந்த நிலையில்தான் பிடிஆரை ராஜினாமா செய்யச் சொன்னார் ஸ்டாலின்.  

PTR Audio to Stalin Video The Background of the Controversy

அதன் அடிப்படையில்தான்  தன்னைப் பார்க்க காத்திருந்த பிடிஆரிடம், ரிசைன் பண்ணுமாறு நான்  சொன்னதாக சொல்லுங்கள் என்று  முக்கிய அதிகாரியை அனுப்பியிருக்கிறார். அந்த அதிகாரி பிடிஆரிடம் சொல்லிய பிறகும் நான் முதல்வரை பார்த்துவிட்டே செல்லுவேன் என்று காத்திருந்தார் பிடிஆர். அப்போது முதலமைச்சர்  தன் வீட்டு கார் பார்க்கிங்கில் கார் ஏற போனபோது  காத்திருந்த பிடிஆரிடம்  ‘ரிசைன் பண்ணிடுங்க’ என்று கோபத்தோடு பேசி அனுப்பினார்.

எந்த அளவுக்கு கோபம் என்றால்   அடுத்த கட்டமாக  புதிய நிதியமைச்சர் யார் என்ற தேடுதலிலும் இறங்கிவிட்டார் முதல்வர். தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவிடம் இதுகுறித்து முதல்வர் தரப்பிடம் இருந்து கேட்கப்பட்டபோது, ’ ஏற்கனவே தொழில் துறையை நிர்வகிக்கும்போது நிதித்துறையும் சேர்த்து கவனிப்பது சுலபமல்ல’ என்று தயங்கி தவிர்த்திருக்கிறார் தங்கம் தென்னரசு.

பூங்கோதை போல பிடிஆர் ராஜினாமா -ஸ்டாலின்  நடத்திய ஆலோசனை

இதேநேரம் அடுத்து என்ன செய்யலாம் என்று அறிவாலயத்தில் திமுகவின் தலைமைக் கழக முன்னோடிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின்.  அப்போது ஒரு சீனியர், ‘இதேபோல 2008 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணா  அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவுடன் தன் உறவினருக்காக  போனில் பேசினார்.

அது பதிவு செய்யப்பட்டு வெளியானது.  அப்போதும் இன்றுபோல சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது.  பூங்கோதையை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார் கலைஞர். அதன் பேரில் அவர் ராஜினாமா செய்தார்.

PTR Audio to Stalin Video The Background of the Controversy

நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஒன்பது மாதங்களுக்குப் பின் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பூங்கோதையின் செயல்பாடுகள் பற்றி எதுவும் குற்றம் சாட்டி குறிப்பிடாத நிலையில் சட்டமன்றத்திலேயே அப்போதைய விடுதலைச் சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்,

‘மீண்டும் பூங்கோதைக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.  இந்த நிலையில் பூங்கோதை மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார். அதேபோல இப்போது பிடிஆரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சில மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சர் ஆக்கலாம்’ என்று முதலமைச்சரிடம்  தெரிவித்தார்.

ஆனால், மேலும் சிலரோ, ‘ நீங்கள் இப்போது பிடிஆரை ராஜினாமா செய்யச் சொன்னால்… அது பிஜேபிக்குதான் வெற்றியாகும், எம்பி எலக்‌ஷன் நெருங்கி வரும் நிலையில் இந்த சூழ்ச்சிக்கு நாம் ஆளாகக் கூடாது’ என்று கூறியிருக்கிறார்கள்.

பிடிஆருக்கு அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்த சபரீசன்

மே 2 ஆம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி அமைச்சரவை கூட்டம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வளவு சர்ச்சைகளோடு நிதியமைச்சர் பிடிஆர் அங்கே எப்படி முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் எதிர்கொள்வார் என்று ஒரு விவாதம் கட்சிக்குள்ளேயே கிளம்பியது.

அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய அஜெண்டாவே கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் செயல் வடிவம் கொடுப்பது பற்றித்தான். அந்த அமைச்சரவை பட்ஜெட்டில் பிடிஆர் வரவில்லை என்றால் மேலும் சர்ச்சை அதிகமாகும்.

PTR Audio to Stalin Video The Background of the Controversy

இதற்கிடையே முதல்வரிடம் மீண்டும்  பேசிய துரைமுருகன் போன்ற சீனியர்கள், ‘அன்று பூங்கோதை டேப் என்பது சின்ன விவகாரம். அதேபோல இப்போது  அமைச்சரை ராஜினாமா செய்யச் சொன்னால், அது எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடுத்தது போல ஆகிவிடும். இதை வைத்தே எடப்பாடியும் அரசியல் லாபம் பார்க்க ஆரம்பிப்பார்.  இது நம் கட்சி விவகாரம். நாமே முடித்து வைக்கலாம். அவரை அழைத்து எச்சரித்து அனுப்புங்கள். இப்போதைய நிலையில் பிடிஆரை போல ஒரு நிதியமைச்சர் நமக்கு தேவை’ என்று கூறியிருக்கிறார்கள்.

சபரீசனும்  லண்டனில் இருந்து  முதல்வரிடமும்,  பிடிஆரிடமும் பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து இதுபற்றி நேரில் பேசுங்கள் என்று நேரமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் சபரீசன். அதன் அடிப்படையில் மே 1 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர்.

முதல்வரை சந்தித்த பிடிஆர்- ஆடியோ சர்ச்சையை முடித்த வீடியோ

சட்டமன்றம் முடிந்து  ஒன்பது நாட்கள் முதலமைச்சரை முறைப்படி சந்திக்கக் காத்திருந்த பிடிஆர் மே 1 ஆம் தேதி சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு சென்று ஸ்டாலினை சந்தித்தார்.  உள்ளே சென்றதுமே முதலமைச்சரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார் பிடிஆர்.

அந்த ஆடியோ உரையாடல்கள் குறித்து விளக்கிய  பிடிஆர் முதல்வரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். தான் ஒரு கோணத்தில் சொன்னது இன்னொரு கோணத்தில் அர்த்தம் தருமாறு வெளியிடப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சரிடம் விளக்கியிருக்கிறார். 

PTR Audio to Stalin Video The Background of the Controversy

அதன் பிறகே நெடு நாட்களாக வெளிவராமல் இருந்த உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்வை ஷூட் செய்த ஸ்டாலின்… அதில் பிடிஆர் பற்றிய கேள்வியையும் சேர்த்து, ‘அதற்கு பிடிஆரே இரு முறை விளக்கம் சொல்லிவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை.

மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை’ என்று  பத்து நாட்களுக்குப் பின் பிடிஆர் ஆடியோ சர்ச்சைக்கு பதிலளித்தார் ஸ்டாலின். அதற்குப் பிறகுதான்  அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அதில் பிடிஆரும் கலந்துகொண்டார். 

அதன் பின்னர் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மதுரையில் பேசும் வாய்ப்பும்  பிடிஆருக்கு கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் பிடிஆரின் இந்த ஆடியோ சர்ச்சைகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் பிடிஆர் மீதான அவரது கோபம் குறைந்திருக்கிறதே தவிர மறையவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

வேந்தன்

இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் நடனமாடுவதாக பரவும் வீடியோ!

“டெஸ்ட்” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பின்னணி பாடகி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *