பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் தனி நபர் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டதாக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் உள்ள ஆடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இருவரும் ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி பணம் சம்பாதித்ததாக அவர் பேசியிருந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஆரின் ஆடியோ டிஎம்கே ஃபைல்ஸ் குற்றச்சாட்டிற்கு வலுசேர்ப்பதாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், இந்த ஆடியோ இட்டுக்கப்பட்ட பொய்யான ஆடியோ என்றும் முதல்வரையும் என்னையும் பிரிக்கும் எந்த தீய நோக்கமும் வெற்றி பெறாது என்று தெரிவித்திருந்தார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஒளிநாடாவின் உண்மை தன்மையை சுதந்திரமாக நியாயமாக தடயவியல் தணிக்கை செய்யக்கோரி ஆளுநர் ஆர்.என்,ரவியை பாஜக துணை தலைவர் கருநாகராஜன், விபி துரைசாமி, பால் கனகராஜ் உள்ளிட்ட 6 பேர் இன்று சந்தித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி,
“பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை சுதந்திரமாக தடயவியல் ஆய்விற்கு உட்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் ரவி எங்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழக மக்களினுடைய வரிப்பணம் அரசாங்கத்திற்கு செல்லாமல் தங்களுடைய பாக்கெட்டிற்கு 30 ஆயிரம் கோடியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது தான் எங்களது குற்றச்சாட்டாகும்” என்று தெரிவித்தார்.
கருநாகராஜன் பேசியபோது, “பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ உண்மையானது தான். இது குறித்து தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்” என்று கூறினார்.
செல்வம்
கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செக் மோசடி வழக்கு….லிங்குசாமி மேல்முறையீடு: நாளை விசாரணை!