டிஜிட்டல் திண்ணை: பிடிஆருக்கு எதிராக திரளும் அமைச்சர்கள்- என்ன செய்வார் ஸ்டாலின்?

அரசியல்

அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போதே மின்னம்பலம்  யு ட்யூப் சேனலில்  தமிழ்நாட்டின் இரு அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்க்கட்சியைப் போல மோதிக் கொள்ளும் வீடியோக்கள் வந்து விழுந்தன.  அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“மதுரையில் கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ’கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. அதனால் நிதியமைச்சர் என்கிற முறையில் கூட்டுறவுத் துறை மீது நான் திருப்தியாக இல்லை.

கூட்டுறவுத் துறையில் கடத்தல்கள் அதிகரித்துள்ளன என்று செய்திகள் வருகின்றன’ என்ற ரீதியில் பேசினார். இதனால் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் ரேஷன் கடைகள் பற்றியும் நிதியமைச்சர் பேசிய தகவல் உணவுத்துறை அமைச்சரான சக்கரபாணியையும் கடுமையான கோபம் அடைய வைத்தது.

ptr against ministers stalin decided

பிடிஆர் பேசிய சில மணி நேரங்களிலேயே அமைச்சர்கள் ஐ. பெரியசாமி,  சக்கரபாணி ஆகியோர்  முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொள்ள முயற்சித்தனர்.   வேறு ஏதோ நிகழ்வில் அவர் இருந்ததால் இருவராலும் முதல்வர் ஸ்டாலினுடன் உடனடியாக பேச முடியவில்லை. 

அதனால் ஸ்டாலினின் தனி உதவியாளர் தினேஷுக்கு போன் செய்து, பிடிஆர்  மதுரையில் பேசிய விவரத்தை சொல்லி இதுபற்றி முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.

‘கேபினட் மீட்டிங்கில் பேச வேண்டியதை எல்லாம் பப்ளிக் மீட்டிங்கில் பேசியிருக்கிறார் பிடிஆர். இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுத்தாகவேண்டும்’ என்று பிறகு முதல்வர் கவனத்துக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொண்டு சென்றிருக்கிறார்.

பிறகு செய்தியாளர்களிடமும்  சக்கரபாணியை வைத்துக் கொண்டே இதுகுறித்து விளக்கமளித்த ஐ. பெரியசாமி, மக்களும் முதலமைச்சரும் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 

வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  ரேஷன் கடையைப் பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை’ என்று பிடிஆருக்கு கடுமையாக பதிலளித்தார்.

அதாவது பிடிஆருக்கு ரேஷன் கடைகள் பற்றியே தெரியாது என்று கூறினார் ஐ.பெரியசாமி. ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள்  நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே முதல்வருக்கு நெருக்கமானவர்களிடமும், முதல்வர் அலுவலக அதிகாரிகளிடமும் பல முறை புகார் சொல்லியிருக்கிறார்கள்.

ptr against ministers stalin decided

அண்மையில் மதுரை அமைச்சர் மூர்த்தியும் நிதியமைச்சர் பி.டி.ஆரின் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடமே புகார் சொல்லியிருந்தார். ‘நான் யாருக்கும் அடிமையில்லை’ என்று தன் ஆதரவாளர்களை கூட்டி பேசியிருந்தார் பிடிஆர்.  ‘அப்ப நாங்க எல்லாம் அடிமையா இருக்குறோம்னு சொல்றாரா?’ என்று மூர்த்தி வெளிப்படையாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டிருந்தார்.

மேலும் பல்வேறு துறை அமைச்சர்கள் தங்களது துறைகளில் இருந்து  கோப்புகள் தயார் செய்து அனுப்பப்பட்டு நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டும் இன்னும் ஒப்புதல் வராமல் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தாமதம் ஆவதாக  வாய்மொழியாக முதல்வர் அலுவலகத்துக்கு சொல்லியிருக்கிறார்கள். 

திமுக பொதுச் செயலாளரும் சீனியர் அமைச்சருமான  துரைமுருகனும் பிடிஆர் பற்றி முதல்வரிடம்  முன்பே  பேசியிருக்கிறார்.  ‘பிடிஆர் அறிவுஜீவித் தனமான கருத்துகள் சொல்வதாக நினைத்து சொல்கிறார்.

ஆனால் ஜனங்ககிட்ட இது நம்மை நாமே எக்ஸ்போஸ் பண்ணிக்கிற மாதிரி ஆயிடுது. எதிர்க்கட்சிகளுக்கு இவரே எடுத்துக் கொடுக்குறாரு. இதெல்லாம் தேர்தல் நேரத்துல நமக்கு எதிராகத்தான் திரும்பும்’ என்று துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்.

கடந்த 2021 செப்டம்பரில்   டி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சீனியர்களை ட்விட்டரில் கடுமையான வார்த்தைகளால்  வறுத்தெடுத்த பிடிஆர், கொஞ்ச நேரத்தில் அதை டெலிட் செய்துவிட்டார். அப்போதே  சீனியர் திமுகவினர்  பிடிஆர் மீது ஸ்டாலினிடம் கடுமையான புகார்களை தெரிவித்தனர்.

இதையடுத்து சபரீசனை அழைத்த முதல்வர் ஸ்டாலின் அவர் மூலமாக பிடிஆருக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பினார்.  முதல்வரின் கோபத்தின் விளைவாக  2022 ஜனவரியில் அவரது ஐடிவிங் மாநில செயலாளர் என்ற கட்சிப் பதவி  பறிக்கப்பட்டது. அதை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிடிஆர். 

அதன் பின் பிடிஆருக்கு கட்சியில் இன்றுவரை எந்த பதவியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மீண்டும் பிடிஆர் கூட்டுறவுத் துறை பற்றி விமர்சித்திருப்பதற்கு அமைச்சர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

பல அமைச்சர்கள் முதல்வரிடம் பிடிஆர் மீது புகார் தெரிவித்து நிலையில்… தன் தூக்கத்தை மீண்டும் கெடுத்த பிடிஆர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு கோட்டை வட்டாரத்திலும், அறிவாலய வட்டாரத்திலும் ஒருங்கே எழுந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

காசிக்கும் தமிழகத்துக்கும் நீண்டபந்தம் உண்டு: மோடி

பிடிஆரின் ஆங்கில வார்த்தை: விளக்கத்தை ஏற்க மறுத்த ஐ.பி.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.