இளைஞர் சமுதாயம் வேலை தேடும் சமுதாயமாக இல்லாமல் வேலை வழங்கும் சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கனவு என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
75-வது சுதந்திரப்போராட்ட அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய மக்கள் தொடர்பகம், சென்னை மண்டல அலுவலகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள அருண்ஸ் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு – அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்’ குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று (ஆகஸ்டு 20) முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இதுவரை அறியப்படாத ஆளுமைகளை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் 180 பேரின் புகைப்படங்கள், அவர்களின் வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக ஒண்டிவீரன், வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் போன்றோரின் வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கண்காட்சியைப் பார்வையிட்ட பின், குத்து விளக்கேற்றி நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நாட்டின் விடுதலை மற்றும் அதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஸ்வராஜ்’ என்ற மெகா தொடர் ஒளிபரப்பப்படுகிறது.
அதன் பிராந்திய மொழி ஒளிபரப்பையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.
தொடர்ந்து முன்னோடி வங்கி சார்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பயனாளிகளுக்கு நிதிஉதவிகளும் வழங்கப்பட்டது. இதையடுத்து ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ என்ற புத்தகத்தையும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த தகவல் புத்தகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
மாணவ மாணவிகளுக்கு பாரதியார் பாடல் குறித்த கையேடும் வழங்கப்பட்டது .
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், “நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட அதிகமானோர் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பது மிகவும் பெருமைக்குரியது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 சுதந்திரப் போராட்ட வீரர்களுடைய வரலாற்றுத் தொடர் தூர்தர்சனில் 9 பிராந்திய மொழிகளில் 75 வாரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
75 சுதந்திரப் போராட்ட வீரர்களில், தமிழகத்தை சேர்ந்த 3 சுதந்திரப் போராட்ட வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், பூலித்தேவன் ஆகியோரது வரலாறும் இந்தத் தொடரில் இடம்பெறுகிறது.
2047-ல் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் என்ற திட்டம் 100-வது சுதந்திர தினத்தில் நிறைவேற வேண்டும். அதற்காக இளைஞர் சமுதாயம் வேலை தேடும் சமுதாயமாக இல்லாமல் வேலை வழங்கும் சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கனவு.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னேறிய, வல்லரசு நாடாக மாறும். சிறப்பான மனித வளத்தை இந்தியா கொண்டுள்ளது. மனிதகுல மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட வ.உ.சியின் பேத்தியும், திருநெல்வேலி மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பாளருமான ஆறுமுகசெல்வியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தகவல் ஒலிபரப்பு அமைச்சக தென்மண்டல தலைமை இயக்குனர் எஸ்.வெங்கடேஷ்வர், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
–வேந்தன்
வல்லரசு நாடாக இந்தியா மாறும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்