Protests against Vishwakarma Yojana on 6th September K Veeramani

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

அரசியல்

பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6ஆம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாஜக தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி அவர்களும் சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சியிலும் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். செருப்பு தைப்பவர் உட்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதி தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூபாய் 13,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

‘குரு சிஷ்யப் பரம்பரை’ என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில் படிக்க விடாமல் பரம்பரை ஜாதித் தொழிலையே செய்யத் தூண்டும், குலத் தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.

இது 1952-1954இல் சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகும்.

ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை எட்டுவதைத் தடுத்து நிறுத்தி,

18 வயது அடைந்தவுடன் அவர்களைப் பரம்பரை ஜாதித் தொழிலை நோக்கியே நகர்த்திடத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் இந்த வருணாசிரம சதித் திட்டத்தை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நாக்கில் தேன் தடவுவது போல, நிதியை ஒதுக்கி, காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்கள், தப்பித் தவறிக் கல்லூரியில் அடியெடுத்து மேற்படிப்பு படிக்க முன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதை முறியடிக்கும் சூழ்ச்சிப் பொறிதான் மத்திய பா.ஜ.க. அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதை எடுத்துக்காட்டி, இந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறது.

பரம்பரை பரம்பரையாக ஜாதி தொழிலையே செய்ய வேண்டும் என்று பிள்ளைகளின் கல்விக் கண்ணைக் குத்தும் இந்தத் திட்டத்துக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல,

இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் திராவிடர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் செப்டம்பர் 6ஆம் தேதியன்று சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

ராஜ்

விக்கிரவாண்டி டோல்கேட்: உயரும் சுங்ககட்டணம்!

பழுதாகி நின்ற பேருந்து: மாணவிகளை தள்ள வைத்த 4 பேர் சஸ்பெண்ட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *