இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இன்று (அக்டோபர் 11) தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறையில் உள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 20 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள். ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த பார்க்கிறார்கள். அதிமுக இப்போது இஸ்லாமிய சிறைவாசிகளின் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர சகோதரிகளுக்கு நன்றாகவே தெரியும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் முதல்வர் தவறான தகவலை அளித்துள்ளதாக திமுக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைமையில் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் ஐஸ்ஹவுஸ் மசூதி பகுதியில் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தஞ்சாவூர் வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்” – ஸ்டாலின் அறிவிப்பு!