கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜூலை 11) ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஓ. பி. எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்ற அறிவிப்பை வாசித்தார்.
தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வத்திடம் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி அல்லது மறைமுக தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“சட்டப்படி தீர விசாரித்து யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை தண்டிக்க வேண்டியது தமிழக அரசு. அதை வலியுறுத்தி தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து கொடநாடு சம்பவத்தின் போது நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்கள், அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்விக்கு,
”துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த வித அதிகாரமும் இல்லை. நான் அமைச்சராக இருந்த துறையில் மட்டும் தான் எனக்கு அதிகாரம் இருந்ததே ஒழிய சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எனக்கு அதிகாரம் இல்லை.
சட்டம் ஒழுங்கை முழுமையாக பார்த்துக் கொண்ட பொறுப்பு யாரெல்லாம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்களோ அவர்களுக்கு தான் உண்டு.
தி. மு. க ஆட்சி பொறுப்பேற்ற பின், கோடநாடு வழக்கைத் தீவிர புலன் விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என வாக்குறுதி தந்துள்ளார் முதல்வர்.
அவரது ஆட்சி அமைந்து 2 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால் சிறு அளவில் கூட முன்னேற்றம் இல்லையே. அரசின் பணியை துரிதப்படுத்தத்தான் இந்த ஆர்ப்பாட்டம்” என்றார்.
அ தி மு க இரட்டை இலை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
மேலும் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு, “அழைப்பு வரவில்லை. ஆனால் பா. ஜ. க தலைவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
மோனிஷா
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு – நீதிபதி கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு!
810 பக்கம்… ரூ.127 கோடி : முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!