Protest in support of Samsung workers: Communist leaders arrested!

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் : கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது!

அரசியல்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இன்று (அக்டோபர் 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக் கோரி கடந்த 4 வாரங்களாக காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனின்னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோரின் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Image

சாம்சங் நிர்வாகத்துக்கு ஆதரவாக திமுக அரசு

அப்போது கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “சாம்சங் நிர்வாகத்தின் கடைக்கண் பார்வையில் கூட கோபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் தமிழக அரசும், காவல்துறையும் நமது ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. இப்பிரச்சினையில் திமுக அரசு, சாம்சங் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கிறது.

தொழிலாளி உரிமையை அளிக்க திமுக அரசு மறுத்ததை எதிர்த்து தமிழகமே போராடுகிறது என்ற நிலைக்கு முதல்வர் இடமளிக்கக் கூடாது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிபணிந்து மக்கள் இருக்க வேண்டுமானால் தமிழக மக்களின் உரிமையை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்?

அடக்குமுறை மூலம் வெற்றி பெற முடியும் என்றால் திமுகவே அரசியலில் இடம்பெற்றிருக்க முடியாது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Image

சந்தேகம் எழுகிறது!

தொடர்ந்து இரா.முத்தரசன் பேசுகையில், “தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க அரசுகள் இருந்த மாநிலத்தில், தொழிற்சங்கம் வைக்கக் கூடாது என நிறுவனம் செய்யும் அடாவடித்தனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஆதரவளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை என நடு இரவில் சொல்வது ஏற்புடையதல்ல. இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடைபெறுகிறதா அல்லது அவருக்கு தெரியாமல் அதிகாரிகள் முடிவெடுக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் முதல்வருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. சாம்சங் நிறுவன பிரச்சினையில் அவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என்று ரா. முத்தரசன் பேசினார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிவந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Image

இதற்கிடையே, சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியிருந்ததாகவும், ஆனால் நள்ளிரவில் அனுமதியை மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உள்ளிட்ட  அனைவரையும் போலீசார்  குண்டுக்கட்டாக கைது செய்ததாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அன்று விஜயுடன்… இன்று ரஜினியுடன் : வேட்டையனை வெல்லுமா பிளாக்?

”வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்” : சேகர்பாபு உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *