அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக இன்று (ஏப்ரல் 9) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில், “2013 ஆம் ஆண்டு ஒரு கட்டண சீரமைப்பு கொண்டு வரப்படுகிறது. அன்று எரிபொருளின் விலை 60 ரூபாய். ஆனால் இன்று எரிபொருள் விலை 103 ரூபாய். எனவே கட்டண உயர்வு இல்லாமல் ஆட்டோவை ஓட்டுவது என்பது கொடுமையானது.
ஊபர், ஓலா, ரெபிடோவை ஏன் அரசு நடத்த முடியாது. சாராய கடையை அரசு நடத்தும் போது இதெல்லாம் ஏன் நடத்த முடியாது. ஸ்விக்கி, சோமேட்டோ கூட அரசு எடுத்து நடத்தலாம்.
அரசு இன்றைக்கு தான் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் தருக்கிறது. அரசு அறிவிப்பதற்கு முன்பே பிரசவத்திற்கு இலவசம் என்று அறிவித்தவர்கள் ஆட்டோ ஒட்டுநர்கள் தான். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறித்துக் கவலைப்படுவதில்லை.
எனவே கேரளா மாதிரி ஒரு ஆப் உருவாக்க வேண்டும். நான் முதலமைச்சர் ஆனால் ’உலா’ என்று ஒரு ஆப் உருவாக்குவேன். இது எல்லாம் அரசு செய்ய வேண்டிய வேலை.
நேற்று (ஏப்ரல் 8) எ.வ.வேலு, பாஜக தமிழ்நாட்டில் வளர்வதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். முதல்வர் ஸ்டாலினும் சேகர் பாபுவும் தான் என்று பேசியிருந்தார். எதிர்கட்சியாக இருக்கும் போது ‘go back modi’ கருப்பு பலூன். ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ‘welcome modi’ வெள்ளைக் குடை.
அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமையாக இருக்கிறது.
இப்ப நம்முடைய கோரிக்கை என்னவென்றால், 10 ஆண்டுகளாக இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஆட்டோவின் அவசியம் என்னவென்று உங்களுக்கு புரியும். ஆட்டோவிலும் அரசு பேருந்திலும் பயணிப்பவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். சொந்தமாக கார், பைக் வைத்து கொள்ள முடியாதவர்கள், குறைந்த வருவாய் ஈட்டுகின்ற மக்கள் தான் ஆட்டோவில் பயணிக்கிறார்கள்.
எனவே இவர்களுக்கான சேவை என்பது ஆட்டோ ஓட்டுநர்களிடம் தான் இருக்கிறது. அதை முறைப்படுத்துங்கள்.
தனியார் தொழிற்சாலை எது வந்தாலும் மாநில இளைஞர்களுக்கு தான் வேலை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக சட்டம் இயற்றியுள்ளது. அரசு வேலையில் 90 விழுக்காடு கொடுத்து 10 விழுக்காட்டை பொதுவாக வைக்கிறது. நாங்கள் 90 விழுக்காடு கூட கேட்கவில்லை. 80 தான் கேட்கிறோம் தமிழ் இளைஞர்களுக்காக” என்றார்.
மோனிஷா
4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் தனுஷின் வுண்டர்பார்
பிற மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு: அமித்ஷாவிற்கு முதல்வர் கடிதம்!