protest against nlc edappadi palanisami

என்.எல்.சி-க்கு எதிராக போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதை என்.எல்.சி நிறுத்தவில்லை என்றால் அதனை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (9.3.2023), கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறை வைத்துவிட்டு, DIG மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் NLC நிர்வாகம் ஈடுபட்டதை அதிமுக சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் போது, NLC நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாதகால விடியா ஆட்சியில் NLC-யின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

NLC நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வளையை தன்னுடைய ஏவல் துறையான காவல் துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

பாரதப் பிரதமர், மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை NLC நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் NLC விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்றுக் கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மத்திய அரசோடும், NLC நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், R&R சட்டப்படி குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அதிமுக அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!

முன்றாவது முறையாக அதிபராக பதிவியேற்றார் ஜி ஜிங்பிங்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts