ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சேலத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 21ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டுள்ளார்.
இதனிடையே, ’சனாதனம் தொடர்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசியும் பரப்பியும் வரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்’ என திராவிடர் விடுதலை கழகம் அறிவித்தது.
அதன்படி இன்று ஆளுநரின் சேலம் வருகையை கண்டித்து கருப்பூர் பகுதியில் உள்ள சேலம் அரசு பொறியியல் கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, மதிமுக, தவாக, மநேமக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் கருப்பு சட்டை அணிந்துகொண்டு காலை 10.30 மணியளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ‘ஆளுநர் ரவியே திரும்பிப்போ’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆளுநர் கருப்பூர் பகுதியை கடந்து செல்லும் போது கருப்பு கொடி காண்பித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் தடுப்புகளை மீறவும் முயற்சித்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். தற்போது ரெட்டிபட்டி ஜங்சன் அருகே உள்ள வேலாயுத கவுண்டர் மண்டபத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடைத்து வைத்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, “மாநில அரசின் ஆலோசனையின் படிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் பாஜக தலைவர்கள் போல் நடந்துகொள்கிறார்கள்.
குஜராத் போன்ற மாநிலங்களில் வேந்தர்களாக உயர்க்கல்வித் துறை அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் வேந்தராக ஆளுநர் இருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்கள் எதிர்க்கிற மும்மொழி கொள்கையை, சமஸ்கிருதத்தை, சனாதன தர்மம் என்கிற வர்ணாசிரம தர்மத்தை தொடர்ந்து ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
வள்ளுவர், வள்ளலாரை எல்லாம் இழிவு படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே சிக்கலை உருவாக்கும் ஆளுநரை அனுமதிக்கக் கூடாது.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் இருக்கிறார். எனவே அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கமலாலயத்தில் இருக்க வேண்டியவர் ஆளுநர் மாளிகையில் இருக்கிறார். சிதம்பரத்தில் குழந்தை திருமணமே நடக்கவே இல்லை என்கிறார். ஆனால் அதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. பொய்யை மட்டுமே ஆளுநர் பேசி வருகிறார்” என்றார்.
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரியா
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!
செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
