அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் : பாஜக எம்.பி. காயம்… ராகுல் குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (டிசம்பர் 19) போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்பி ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நேற்று முழுவதும் அமித் ஷா மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக முடங்கியது.

நீல நிற உடையில் போராட்டம்!

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில் அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக பேசிய அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீல நிற உடையில் அவைக்கு வெளியே வந்த ராகுல்காந்தி, கார்கே, டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள். அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்திய படி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலையில் காயம்!

பதிலுக்கு போட்டியாக பாஜக எம்.பிக்களும், ‘காங்கிரஸ் ஆட்சியில் தான் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டார்’ என போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே ’ராகுல்காந்தி தள்ளிவிட்ட எம்.பி தன் மேல் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது’ என கூறி பாஜக எம்பி பிரதாப் சாரங்கி குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.

பாஜக எம்.பிக்கள் தள்ளிவிட்டு மிரட்டினர்!

மறுபுறம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை பாஜக எம்.பிக்கள் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “நாங்கள் இன்று பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றோம். ஆனால் பாஜக எம்பிக்கள் எங்களை தடுக்க முயன்றனர், எங்களை தள்ளிவிட்டு மிரட்டினர்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரின் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

’கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லை’ : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

திருமணமான 20 நாளில் விபத்தில் மரணமடைந்த தம்பதி… ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட சோகம்!

சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share