இயற்கையை காப்பது நம் கடமை: மு.க.ஸ்டாலின்

Published On:

| By Jegadeesh

இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சினை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிசம்பர் 9 )தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காக மட்டுமல்ல உலகத்தின் நன்மைக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எல்லை இல்லை. இயற்கைக்கு வரையறை இல்லை. இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. இயற்கையைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது என்கின்ற அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல இது உலகளாவியபிரச்சினை அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக் கூடிய பிரச்சினை அல்ல அதனால்தான், நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்ஹிம் இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, அரசு சாரா உறுப்பினர்களும் இணைந்து இது ஒரு மாநாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு ஐ.நா. அமைப்பாக இருந்தாலும் – உலகின் பலநாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சினையைப் பற்றிதான் அனைவரது கவலையும். அதுதான் காலநிலை மாற்றம்.

மானுடத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் என்பது இருக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசும் மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது என்பதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இதனை ஒரு வரலாற்றுக் கடமையாக மட்டுமல்ல எனது வாழ்க்கைக் கடமையாகவும் நான் பார்க்கிறேன்.

“நிலம் – தீ – நீர் – வளி – விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று தொல்காப்பியம் தொடங்கி, “நீரின்றி அமையாது உலகம்” என்ற வள்ளுவம் வரை, சூழலைப் போற்ற வேண்டியதன் தேவையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியது தமிழ்ச் சமூகம்.

அதனால்தான், அந்தப் பாதையில் நமது அரசு இன்று செயல்பட்டு வருகிறது.

உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள் என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது, “நான் இயற்கை மனிதன்” என்று சொன்னார். “செயற்கையான அடையாளங்கள் எதுவும் எனக்குக் கிடையாது” என்றார். “மானுடப்பற்று மட்டுமே எனக்கு உண்டு” என்று சொன்னார்.

அத்தகைய இயற்கை மனிதர்களா, மானுடப்பற்று மட்டுமே கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும். வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை நமக்கு இயற்கை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

அதிகமான வெயில், அதிகமான மழை, காலம் தவறிப் பெய்யக்கூடிய மழை, மழை பெய்யாமலே போவது, அதிகப்படியான வெப்பம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புதிய புதிய நோய்கள், உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுவது,

உணவுப்பொருள் தட்டுப்பாடு, மண் வளம் குறைதல், காற்று மாசுபடுதல் இவை அனைத்தும் அதிகமாக ஏற்படுவதை இன்று கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாஷிங்டன் சுந்தர் புதையலை போன்றவர்:பாராட்டிய முன்னாள் வீரர்!

மாண்டஸ்: புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel