சபாநாயகரை தொடர்ந்து ஜனாதிபதி உரையிலும் ’எமெர்ஜென்சி’!

Published On:

| By indhu

President Address : எமெர்ஜென்சி அறிவிப்பு என்பது அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதல் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜூன் 27) பேசியுள்ளார்.

18-வது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும், அவர் அமல்படுத்திய எமர்ஜென்சியையும் விமர்சித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில மற்றும் மக்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

3வது முறையாக பாஜக மீது மக்கள் நம்பிக்கை

அப்போது பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “நாட்டு மக்கள் சார்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் நிலையான அரசாங்கம் தற்போது அமைந்துள்ளது. மக்கள் 3வது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 18வது மக்களவை பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும்.

வருகின்ற அமர்வுகளில் வெளியிடப்படும் பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள், பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும்.

இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றின் மூலம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கி நாம் பயணித்துகொண்டிருக்கிறோம்.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு ரூ.3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. தற்போதைய இந்தியாவில் கரிமப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்திய விவசாயிகள் இந்த தேவையை பூர்த்தி செய்யும் முழு திறனையும் பெற்றுள்ளனர். சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அவர்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

25 கோடி இந்தியர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. முதல் முறையாக, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

திறமையான இந்தியாவிற்கு, நமது ஆயுதப் படைகளில் நவீனத்துவம் அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

ஜிஎஸ்டியால் மாநிலங்களின் லாபம் அதிகரிப்பு

ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் ஒரு ஊடகத்தை உருவாக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது மாநிலங்களின் லாபத்தை அதிகரித்துள்ளது.

நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் கடமையாகும். சமீபத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக நியாயமான விசாரணைக்கு மேற்கொள்ளப்படும்.

நமது அரசாங்கம் CAA சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது. நமது இளைஞர்கள் விளையாட்டிலும் புதிய வாய்ப்புகளைப் பெறுகின்றனர். அரசின் முயற்சியின் விளைவாக, இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்கள், சர்வதேச அரங்கில், சாதனை எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த சாதனைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல, 2036 ஒலிம்பிக்கை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகிறது.

எமெர்ஜென்சி அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதல்

அடுத்த சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாகி 75வது வருடத்தை நிறைவு செய்யப்போகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமெர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அங்கு 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது.

இந்தியா பல துறைகளில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக தரத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரனின் தென்பகுதியில் சந்திரயான் இறக்கப்பட்டதற்கு நாம் பெருமைகொள்ள வேண்டும்.

இந்தியா உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இந்தியா இவ்வளவு பெரிய தேர்தலை வன்முறையின்றி நடத்தி முடித்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும். இன்று முழு உலகமும் நம்மை ஜனநாயகத்தின் தாய் என்று மதிக்கிறது நாம் அதை பாதுகாக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவில் அறிமுகமான “மெட்டா ஏஐ”: என்னென்ன பயன்கள் தெரியுமா?

”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை” : அஜித் பவார் பளீர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel