டிஜிட்டல் திண்ணை: ராகுலுக்கு நீதி கேட்டு பிரியங்கா நெடும் பயணம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பிரியங்காவின் டிரண்டிங் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்தான் இந்திய அரசியலில் இன்று அதிர்வுகளை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மோடி என்ற குடும்பப் பெயர் கொண்டவர்களை பொதுவாக தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி, அதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மார்ச் 23 ஆம் தேதி சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்பி பதவி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து இந்தியா முழுதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவில் வழக்கம்போல் உக்கிரமான போராட்டங்கள் நடக்கின்றன. தீப்பந்த ஊர்வலம் எல்லாம் நடத்தியிருக்கிறார்கள் காங்கிரஸார்.
இந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் பேச்சு அரசியல் வட்டாரம் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் வலிமையாக போய் சேர்ந்திருக்கிறது.

பிரதமர் மோடி ஒரு கோழை என்றும் அதிகாரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள முடியாமல் தகுதி நீக்கம் செய்திருக்கிறார் என்றும் சாடினார் பிரியங்கா. அதுமட்டுமல்ல ராகுல் மீதான அவதூறு வழக்கு நாடாளுமன்றத்தில் அதானி -மோடி படத்தை ராகுல் காட்டியபிறகு உயர் நீதிமன்ற தடை விலக்கப்பட்டு வேகம் எடுத்து தீர்ப்பளிக்கப்பட்டதையும் பேசினார் பிரியங்கா காந்தி.

மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று தனது முன்னோர்கள் இந்த நாட்டுக்காக ரத்தம் சிந்தி உயிர்விட்டதை சுட்டிக் காட்டிய பிரியங்கா… நாடாளுமன்றத்திலேயே தனது குடும்பத்தை பிரதமர் மோடி அவமானப்படுத்தியதாகவும் மோடிக்கு என்ன தண்டனை என்றும் கேட்டார் பிரியங்கா.
பிரியங்காவின் பேச்சைக் கேட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு முக்கிய வேண்டுகோள் போயிருக்கிறது.
பிரியங்காவின் பேச்சு இந்தியா முழுதும் கிராமங்கள் வரை சாதாரண மக்களிடத்திலும் சென்று சேர்ந்திருக்கிறது. எனவே ராகுல் காந்திக்கு நீதி கேட்டும், 2024 தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையிலும் பிரியங்கா காந்தி இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலமாக செல்ல வேண்டும். அங்கே பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். ராகுலுக்காக நீதி கேட்க சரியான பிரச்சார பீரங்கி பிரியங்காதான் என்று கோரிக்கை வைத்துள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முக்கியஸ்தர்கள். இதை காங்கிரஸ் தலைவர் கார்கேவிடமும், பிரியங்கா காந்தியிடமும், சோனியா காந்தியிடமும் அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.


காங்கிரஸ் ஒருபக்கம் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மக்கள் மன்றத்தில் இந்திரா காந்தி போன்ற சாயல் கொண்ட பிரியங்கா பேசினால் 2024 ஆட்சி மாற்றத்துக்கான அச்சாரமாக இருக்கும் என்பதுதான் தமிழ்நாட்டில் இருந்து போயிருக்கும் இந்த விண்ணப்பம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
இதைப் பார்த்த மெசஞ்சர், “நீதி கேட்டு நெடும் பயணம் என்பது அரசியலில் முக்கியமான ஒரு கருவி. அண்மையில்தான் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். இந்த நிலையில் பிரியங்கா காந்தி நாடு முழுதும் பயணம் மேற்கொண்டால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசும் அறிந்துள்ளது என்று டெல்லி சோர்ஸுகள் சொல்கிறார்கள். நேற்று டெல்லியில் பிரியங்கா பேசிய பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு பற்றிய நோட் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் சென்று சேர்ந்திருக்கிறது” என்று குறிப்பிட்டு வாட்ஸ் அப்பின் மெசேஜை ஷேர் செய்தது.

பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்

தல தோனியை பார்க்க அரிய வாய்ப்பு…நுழைவு கட்டணம் இல்லை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *