டிஜிட்டல் திண்ணை: ராகுலுக்கு பதில் பிரியங்கா… காங்கிரசில் கலகக் குரல்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தின் போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

“நவம்பர் 29 ஆம் தேதி காங்கிரஸின் தேசிய செயற்குழுக் கூட்டம் அதாவது (Congress Woriking Comittee) கூட்டம் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த செயற்குழுக் கூட்டத்தில் நடந்து முடிந்த ஹரியானா, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு படுதோல்வி அடைந்தது பற்றியும் காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் சிலர்  பேசிய நிலையில், மகாராஷ்டிர காங்கிரஸ் நிர்வாகிகள், ‘நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழலில்தான் இருந்தது. ஆனால் நாம் அதை முறையாக பயன்படுத்தத் தவறிவிட்டோம். நமது கட்சியின் தேசிய நட்சத்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கை அதிகப்பட்டிருக்கும்’ என்று கூறினார்கள். அவர்கள் தேசிய நட்சத்திரம் என்று பெயர் குறிப்பிடாமல் சொன்னது ராகுல் காந்தியைதான்.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், பல்வேறு மத்திய அமைச்சர்கள், பல்வேறு பாஜக மாநில முதலமைச்சர்கள் மகாராஷ்டிராவை மையம் கொண்டு பிரச்சாரத்தை முழுக்க முழுக்க பாஜக மயமாகவே ஆக்கினார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவர் ராகுல் காந்தி மிக சொற்ப நாட்களே மகாராஷ்டிரா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மோடி, அமித் ஷா, நிதின் கட்கரி, பட்னவிஸ், யோகி என்று பாஜகவின் தலைவர்கள் மகாராஷ்டிராவை தொடர்ந்து டார்கெட் செய்தனர்.

பிரதமர் மோடி 10 பேரணிகளில் பங்கேற்று  மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 106 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 16 பேரணிகள் மூலம் 38 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

மகாராஷ்டிரா முழுவதும் அதிகபட்சமாக 75 பேரணிகளில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நவம்பர் 4 முதல் 18 வரை 72 பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களை நடத்தினார்.

காங்கிரஸ் கூட்டணியிலே இருக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், 80 வயதுக்கு மேல் ஆன நிலையிலும் கூட 55 பேரணிகளில் பேசியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி 7 பேரணிகளிலும், மல்லிகார்ஜுன் கார்கே 9 பேரணிகளில் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரே ராகுல் காந்தியின் இந்த போக்கு குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த புலம்பல்தான் காங்கிரஸ் செயற்குழுவிலும் இலை மறை காயாக வெளிப்பட்டிருக்கிறது.

பிரதமர் பதவியில் இருக்கும் மோடி இவ்வளவு தூரம் மகாராஷ்டிரா மீது அக்கறை செலுத்தி தீவிர பிரச்சாரம் செய்யும் போது… கட்சிப் பணியை மட்டுமே பார்க்க வேண்டிய சூழலில் இருக்கும் ராகுல் காந்தி ஏன் மிக சொற்பமான நேரத்தையே மகாராஷ்டிராவுக்காக செலவிட்டார்?  காரணம் என்னவெனில், ‘மகாராஷ்டிராவில் எளிதாக காங்கிரஸ் ஜெயிக்கும்’ என்று தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் சிலர் சொன்ன தியரியை நம்பி பிராக்டிகலாக களத்தில் இறங்க தவறிவிட்டார் ராகுல்.

இதைத்தான் காங்கிரஸ் செயற்குழுவில் சிலர் மறைமுகமாக பேசினார்கள். இதைப் புரிந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கார்கே, இந்த விஷயத்தில் ராகுலை சமாதானப்படுத்தும் வகையில், ‘தேசிய தலைவர்கள் மற்றும் தேசிய பிரச்சினைகளின் உதவியுடன் மாநில தேர்தல்களில் இன்னும் எத்தனை நாட்கள் போராடுவீர்கள்?” உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். கட்சியின் மாநிலத் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விரிவான உத்திகளைத் தயாரிக்க வேண்டும்.  தேர்தல் ஏற்பாடுகள் குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார் கார்கே.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு கட்சிக்குள் பிரியங்கா காந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றன என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். 2014 முதல் ராகுல் காந்தி பாஜகவையும் மோடியையும் எதிர்த்து வந்திருக்கிறார். ஆனால் முக்கியமான நேரங்களில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வெளிநாடுகள் செல்வதும், களத்தில் இல்லாமையும் ராகுல் காந்தி மீதான முக்கியமான விமர்சனங்களாக உள்ளன.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில்  வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றிருக்கும் பிரியங்கா காந்தி, அத்தொகுதியில் தனது அண்ணன் ராகுல் காந்தி பெற்ற 3 லட்சத்து 64 ஆயிரம் வித்தியாசத்தை விட அதிகமாக 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்திரா காந்தியைப் போலவே இருக்கும் பிரியங்காவை காங்கிரசின் முகமாக பயன்படுத்த வேண்டும். அவரை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிட வேண்டும். அவருக்கும் கட்சிக்குள் மேலும் சில முக்கிய அதிகாரங்களை புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும். பிரியங்காவின் புதிய வேகம் பாஜகவை வீழ்த்தி காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்கும்’ என்ற குரல்கள் காங்கிரஸ் கட்சிக்குள் மெல்ல மெல்ல வலிமை பெற்று வருகின்றன. ஏற்கனவே சோனியாவுக்கு எதிராக 23 தலைவர்கள் குரல் எழுப்பினார்களே… அதுபோல விரைவில் இதுவும் பகிரங்கமாக நடக்கலாம்’ என்கிறார்கள் காங்கிரஸ் செயற்குழுவில் கலந்துகொண்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?

இரண்டு வீடுகள் மீது சரிந்த பாறைகள்! – மாயமான 7 பேர் கதி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel