அரசுத் தேர்வு அப்ளிகேஷனுக்கு கூட 18% ஜிஎஸ்டியா? – பாஜகவை கிழித்தெடுத்த பிரியங்கா காந்தி

Published On:

| By Minnambalam Login1

பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில்லை ஆனால் அரசு வேலை விண்ணப்ப படிவங்களுக்கு கூட 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கிறது என்று பிரியங்கா காந்தி எம்.பி. பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி குழுக்கூட்டம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்றது. இதில் பல ஜிஎஸ்டி வரிகள் மாற்றியமைக்கப் பட்டன.

குறிப்பாக பேக் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி, பேக் செய்த பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி மற்றும் சர்க்கரை கலந்த பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் பிரியங்கா காந்தி எம்.பி. நேற்று(டிசம்பர் 23) தனது எக்ஸ் தளத்தில் போட்ட ஒரு பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது ” பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில்லை. ஆனால் தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்களுக்காக 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து வேலை கிடைக்காத இளைஞர்களின் காயங்களின் மீது உப்பை தடவுகிறது.

அக்னிவீர் உட்பட எல்லா அரசுப் பணி விண்ணப்பங்களின் மீதும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. படிவத்தை பூர்த்தி செய்த பின், அரசின் தவறால் பேப்பர் கசிந்தாலோ, ஊழல் நடந்தாலோ, இளைஞர்களின் இந்த பணம் முற்றிலும் வீண்தான்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு பைசாவையும் சேமித்து தங்கள் குழந்தைகளைப் படிக்கவும், தேர்வுக்கு தயார்ப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் பாஜக அரசு அவர்களின் கனவுகளை கூட வருமானத்துக்கான ஆதாரமாக மாற்றியுள்ளது.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக உத்தரப் பிரதேச தலைநகரம் லக்னோவில் இருக்கும் கல்யாண் சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்று நோய் நிறுவனத்தில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தின் கட்டண விவிரங்களை அவர் இந்த பதிவில் இனைத்துள்ளார்.

ஜிஎஸ்டி 2017 ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்தே அதில் இருக்கும் பல குறைகளை மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுத்துக்காட்டி வந்த நிலையில், பிரியங்கா காந்தியின் இந்த பதிவு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அப்துல் ரஹ்மான்

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை… தலைவர்கள் புகழஞ்சலி!

“5, 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது”: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share