இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

பிரியங்காவின் அரசியல் எழுச்சி பலரையும் மலைக்க வைத்துள்ளது. நீண்ட காலமாக நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி BackEnd-ல் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி, 2019 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் கட்சிப் பொறுப்பில் நேரடியாக அடியெடுத்து வைத்ததிலிருந்து பல சிக்சர்களை விளாசி வருகிறார்.

சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் பகுதியில் பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ விற்கு கூடிய கூட்டத்தின் எழுச்சியைப் பார்த்து பாஜகவினர் திகைத்து விட்டார்கள். காங்கிரசுக்கு ஒரு புத்தெழுச்சியை பிரியங்காவின் பிரச்சாரம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இந்திரா காந்தியை நினைவூட்டும் சாயல்

பாஜகவினர் மற்றும் மோடியின் விமர்சனங்களுக்கெல்லாம் சிங்கிள் விமென் ஆர்மியைப் போல பதிலடிகளைக் கொடுத்து விளாசிக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. அவரது நடை, உடை, சாயல், பேச்சு, செயல்திட்டம் என அனைத்தும் அப்படியே அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவூட்டுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

அவர் கையை உயர்த்தி மேடையில் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசும்போதெல்லாம், மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது. அவரது பேச்சு மக்கள் மொழியில் இருப்பதால் மக்களுடன் எமோஷனலாக கனெக்ட் ஆகும் தன்மை அவரிடம் இருப்பதாக மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். அவர் தனது புடவையின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டே கையை உயர்த்தியபடி உரத்த குரலில் பேசுவதைப் பார்க்கும்போது, அப்படியே இந்திரா காந்தியைப் பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார்கள் காங்கிரசில் உள்ள சீனியர்கள்.

ரேபரேலி, அமேதி – முழு கன்ட்ரோல் எடுத்த பிரியங்கா

வழக்கமாக நேரு குடும்பத்தினர் களமிறங்கும் உத்திரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்ததால், ரேபரேலியில் பிரியங்கா காந்தி தான் களமிறங்கப் போகிறார் என நாடு முழுக்க பேச்சுகள் அடிபட்டன. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி, இரண்டாவது தொகுதியாக ரேபரேலியில் களமிறங்குவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஏன் பிரியங்கா வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் ராகுல், பிரியங்கா இருவருமே வேட்பாளராக களமிறங்கினால் மற்ற மாநிலங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு போதுமான அவகாசம் இருக்காது என்று, ராகுலை வேட்பாளராக முன்னிறுத்திவிட்டு, பின்னால் இருந்து எல்லா வேலைகளையும் தீவிரமாக பிரியங்காவே பார்த்து வருகிறார். மேலும் ராகுலை மற்ற மாநிலங்களில் பிரச்சாரங்களுக்கு அனுப்பிட்டு அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று வருகிறார் பிரியங்கா.

இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் முடியும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்று அறிவித்து அங்கேயே முகாமிட்டிருக்கிறார். மே 20 ஆம் தேதி அமேதி மற்றும் ரேபரேலியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மே 18 அன்று பிரச்சாரம் ஓயும் வரை அங்கு தான் இருக்கப் போகிறார் பிரியங்கா. தினந்தோறும் 20 சிறிய கூட்டங்களையாவது நடத்துவதற்கு பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

இரண்டு தொகுதிகளில் பிரியங்காவின் திட்டங்கள்

இரண்டு தொகுதிகளிலும் 500 கிராமங்களில் பிரியங்கா வீதிக் கூட்டங்களை நடத்த உள்ளார். முழு நேரமும் களத்திலேயே இருப்பதால், பிரியங்காவே அங்கு போட்டியிடுவதைப் போன்ற இமேஜை காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

மேலும் இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக இரண்டு முன்னாள் முதலமைச்சர்களை நியமித்துள்ளார். ரேபரேலி தொகுதிக்கு சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலையும், அமேதிக்கு ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டையும் களமிறக்கியுள்ளார்.

ரேபரேலியில் பூத் லெவலில் வேலை செய்வதற்காக ஆக்டிவான ஃபீல்ட் வொர்க்கர்கள் 7500 பேர் காங்கிரசிலிருந்து களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் சோசியல் மீடியா தளத்தில் வலிமையை உறுதி செய்வதற்காக அந்த டீம்களையும் பிரியங்கா நேரடியாக கண்காணித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

ராகுல் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி

ராகுல் ஏன் அமேதியில் நிற்காமல் பயந்து ஓடுகிறார் என்று மோடி கேட்டதற்கு, குஜராத் பிரச்சாரத்தில் நின்று கொண்டு, மோடி எதற்காக அவரது சொந்த தொகுதியில் நிற்காமல் வாரணாசிக்கு ஓடினார் என்று கேள்வி எழுப்பி செம டஃப் கொடுத்தார் பிரியங்கா.

ராகுல் பப்புவா? முகத்தில் தூசி படாத மோடி

”ராகுலைப் பார்த்து பப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், உத்திரப் பிரதேசத்தில் அவர் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கூடிய கூட்டத்தைப் பார்த்து பயந்து போயிருக்கிறார்கள். ராகுலை ராஜா வீட்டு மகன் என்று பாஜகவினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர் தான் மக்களோடு மக்களாக 4000 கிலோ மீட்டர் நாடு முழுதும் நடந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். மோடி எப்போதாவது இதுபோல் விவசாயிகளுடனோ, தொழிலாளிகளுடனோ அமர்ந்து பேசியதுண்டா? முகத்தில் தூசியே படாமல், எப்போதும் அரண்மனை நாயகனைப் போல ஹெலிகாப்டரிலும், காரிலும் வலம்வரும் மோடியால் மக்கள் படும் துன்பங்களைப் புரிந்து கொள்ள முடியாது” என்று பிரச்சாரக் களத்தில் மோடியின் கமெண்ட்ஸ்களுக்கு எல்லாம் செம ஃபைட் கொடுத்து வருகிறார் பிரியங்கா என்று காங்கிரசார் உற்சாகமாய் இருக்கிறார்கள்.

நேருவும் காந்தியும்…

அதேபோல் நேரு குறித்த பாஜகவின் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நாட்டில் நேருவும், காந்தியும் மக்களுக்காக போராடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் இந்த நாட்டில் ஒரு கட்சி அவர்களைப் பார்த்து துரோகிகள் என்று சொல்லும் என ஒருபோதும் அவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள் என்று பேசி பாஜகவிற்கு எதிரான விவாதத்தை உருவாக்கினார்.

மேலும் பாஜக எப்போதும் சாதி, மதம், கோவில்-மசூதி என்றேதான் பேசிக் கொண்டிருக்கிறதே தவிர மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை என்பதையும் பிரச்சாரங்களில் பேசி வருகிறார்.

இந்தி பெல்ட்டில் காங்கிரஸ் வசமான ஒரே மாநிலம்; காப்பாற்றிய பிரியங்கா

இதையெல்லாம் தாண்டி கட்சியின் பேச்சுவார்த்தைகளில் முக்கிய தலைமையாக உருப்பெற்று வருகிறார் பிரியங்கா. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். அதன்பிறகு அங்கு காங்கிரசின் ஆட்சி கலைந்து விடும் என்ற சூழல் நிலவியது. அந்த சூழலை மிக சாதூர்யமாகக் கையாண்டு, இந்தி பெல்ட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தை தக்க வைத்தது பிரியங்கா காந்திதான் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். மேலும் இன்று வரை இமாச்சலப் பிரதேச முதல்வர் மற்றும் இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து நிலைமை மாறாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறாராம்.

அகிலேஷுடன் பேச்சுவார்த்தை

அதேபோல் உத்திரப் பிரதேசத்தில் துவக்கத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்கள் எழுந்தபோது, பிரியங்கா நேரடியாக உள்ளே வந்து அகிலேஷ் யாதவிடம் பேசி தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்ததுடன், உத்திரப்பிரதேசத்தில் ராகுலின் யாத்திரையிலும் அகிலேஷை பங்கேற்க வைத்து கூட்டணி உறுதியாக இருப்பதை மக்களிடம் காட்டினார்.

அசோக் கெலாட்-சச்சின் பைலட் பஞ்சாயத்து

அதேபோல் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழும் சூழல் இருந்தபோது அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்ததில் பிரியங்காவின் ரோல் முக்கியமானது என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

பொதுவெளியில் பிரியங்காவிற்கு உருவாகியுள்ள ஒரு இமேஜைத் தாண்டி கட்சிக்குள்ளும் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் பிரியங்கா முக்கியமான ஆளுமையாக செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். பிரியங்கா வட்டம், ராகுல் வட்டம் என்று காங்கிரசில் இரண்டு எதிரெதிர் வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கிய நேரத்தில், ராகுல் மீதான விமர்சனங்களுக்கு ஷார்ப்பாக பிரியங்கா பதிலடி கொடுத்து வருவதன் மூலம் அந்த நரேஷன்களுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.

புத்துணர்ச்சி பெற்ற காங்கிரஸ் தொண்டர்கள்

”எங்களை துரோகிகள் என்று சொல்லலாம். எங்களை வீடுகளிலிருந்து வெளியேற்றலாம். என் அண்ணனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றலாம். எங்கள் மீது ஏராளமான வழக்குகளைப் போடலாம். என் அண்ணன் குஜராத், பீகார் என பல மாநிலங்களின் நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். எவ்வளவு செய்தாலும் இந்த மண்ணுடன் எங்களுக்கு உள்ள உணர்வை அவர்களால் நீக்க முடியாது” என்று ஆவேசமாக பிரியங்கா பேசிக் கொண்டிருக்கும்போதே சுற்றியிருந்த கூட்டம் உணர்ச்சியுடன் முழங்குவதை அவரின் கூட்டங்களில் பார்க்க முடிகிறது. இத்தகைய காட்சிகளை சமீப காலங்களில் காங்கிரஸ் கூட்டங்களில் பார்க்க முடியாமல் இருந்தது. இது காங்கிரசுக்கு கிடைத்துள்ள புத்துணர்ச்சி என்று தொண்டர்கள் நாடெங்கும் உற்சகமாய் இருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்களும் உத்திரப் பிரதேசத்தில் இழந்த இடத்தை மீட்டெடுப்பதற்கு காங்கிரசுக்கு பிரியங்காவின் ஆளுமை பெரிய அளவில் உதவும் என்கிறார்கள்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இனி இந்தி பெல்ட் இப்படித்தான்…மோடிக்கு சவால் விடும் 34 வயது இளைஞர்…இளைஞர்களின் நாயகனாக உருவெடுத்த தேஜஸ்வி யாதவ்!

கர்நாடக தேர்தலில் திருப்பம்… வடகர்நாடகா முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகிறதா? சரிகிறதா பாஜகவின் கோட்டை?

தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக்கூடாது : சந்திரபாபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி

மேற்கு வங்கம்: களத்தை மாற்றிய இடதுசாரிகள்…மம்தாவிற்கு கிடைத்த நம்பிக்கை…பாஜக இந்த முறை வெல்ல முடியுமா?

+1
0
+1
1
+1
0
+1
7
+1
0
+1
1
+1
0