கர்நாடகா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தோசை சுட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் மே 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது, “கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் குழி தோண்டிக்கொண்டிருக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இது என்ன மாதிரியான பேச்சு? கர்நாடகா மக்கள் இந்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பிரச்சாரத்தின் போது இன்று மைசூரில் உள்ள ஒரு பழமையான ஓட்டலில் பிரியங்கா காந்தி தோசை சுட்டார். அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மைலாரி ஓட்டல் நிர்வாகிகளுடன் தோசை சுட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நேர்மை, கடின உழைப்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். உங்களுடைய விருந்தோம்பலுக்கு நன்றி. இந்த தோசை மிகவும் அருமையாக உள்ளது. எனது குழந்தைகளை இங்கு அழைத்து வந்து உணவளிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 11 பேர் பலி!
சூடான் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!