பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 5) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளே கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் அந்த பகுதியில் 144 தடை போடப்பட்டிருப்பதால் தடையை மீறி பேரணியாகச் சென்றதாக ராகுல் காந்தி உட்பட 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய அக்பர் சாலையில் பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரணியாக சென்று பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடுவதுதான் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் அணியின் திட்டமாக இருந்தது.
இந்தச்சூழலில் கருப்பு உடை அணிந்து சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பிரியங்கா காந்தியையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அதுபோன்று மகளிர் அணியைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பிரியா