கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் இன்று (ஏப்ரல் 19) சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கிறிஸ்தவர்களாக மதம்மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்னரும், சாதிய கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடர்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, இந்து, சீக்கிய, பெளத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களைச் சார்ந்த யாரும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவராக கருத முடியாது.
வரலாற்று ரீதியாகவே ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும்போது, பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானது. அதன்மூலமாக தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
மதம் மாறிவிட்டார் என்பதற்காக சமூக ரீதியாக அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டுள்ள உரிமைகளை இவர்களுக்கு தரமறுப்பது சரியல்ல.
மனிதர்களுக்கு தாங்கள் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. இத்தகைய சாதி என்பது நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற நிலையில் உள்ளது.
சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம் தான் சமூக நீதி தத்துவம். இந்த சமூக நீதி தத்துவம் முறையாக பின்பற்றபடவேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம்.
அந்த வகையில் கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு.
கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி மத்திய அரசை வலியுறுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.
மத்திய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவி சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து இத்தீர்மானத்தை பல்வேறு கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்றதை தொடர்ந்து கிறிஸ்தவர்களாக மதம்மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம்: பேரவையில் எழுந்த கோரிக்கைகள்!
லூப் சாலை போராட்டம்: தடுப்புகளை அகற்றிய மீனவர்கள்!