டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு பிரைவேட் மெசேஜ்… மேடையில் பப்ளிக் மெசேஜ்… ஸ்டாலின் வைக்கும்  ட்விஸ்ட்! 

அரசியல்

வைஃபை  ஆன் செய்ததும்  திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட படங்கள் குரூப்பில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்த பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.  

”பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை பிரதமர் மோடியை  அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு திமுகவுக்குள்ளும் திமுகவைத் தாண்டி டெல்லி வரை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்குள்ளும் விவாத அலைகளை ஏற்படுத்தியது,

உதயநிதி டெல்லிக்கு செல்வதற்கு முன்னர் திடீரென சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு வந்தார். சிங்கப்பூர் சென்று வந்தவர் நாடு திரும்பி டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் இப்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்  இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக வாழ்த்துக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றபோதுதான் எதேச்சையாக பிரதமர் மோடியின் அப்பாயின்மென்ட் கேட்கப்பட்டதாகவும் மோடி சந்திக்க நேரம் வழங்கினார் என்றும் உதயநிதி தரப்பினர் சொல்கிறார்கள். பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவரை சந்தித்தேன்.

அப்போது,  ‘டெல்லி வரும்போது என்னை பாருங்கள்’ என சொன்னார். அதன் அடிப்படையில் நேரம் கேட்டோம். கொடுத்தார்’ என்று சொல்லியிருந்தார்.

private message to modi stalin twist

ஆனால்  நடந்ததோ வேறு…பிரதமர் மோடியின் அப்பாயின்மென்ட் கிடைத்த நிலையில்தான் பன்வாரிலால் புரோகித் இல்லத் திருமண விழாவுக்காக உதயநிதி அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் திமுகவுக்குள்ளேயே.  அந்த தேதியில் திமுகவின் டெல்லி முகங்களாக கருதப்படும் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் இல்லை.

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று  பன்வாரிலால்  புரோகித் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். திமுகவுக்கு ஆளுநர்கள் மீது எப்படி எதிர்ப்பு உண்டோ அதுபோல ஈர்ப்பும் உண்டு.  சுர்ஜித் சிங் பர்னாலா தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோதுதான் திமுக அரசை கலைக்கும் பரிந்துரையில் கையெழுத்திட மறுத்தார். ஆனால் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக கடுமையாக எதிர்த்தது.

அவர் கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்தபோதுதான்  மாவட்டம் மாவட்டமாக சென்று  அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அதை எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்து போராட்டம் எல்லாம் நடத்தியது. ஆனால் திமுக தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக வந்தபோது ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித்.

அவர் முதல்வர் ஸ்டாலினுடன் சற்று இணக்கமாக இருந்ததாகவும் அதன் காரணமாகவே மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்றும் அப்போது தகவல் வந்தது. இந்த பின்னணியில்தான் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி பிரதமர் சந்திப்புக்காக மட்டுமே டெல்லி சென்றதாக இருக்கக் கூடாது என்பதால்தான் ஆளுநர் இல்ல திருமணம்,  மத்திய அமைச்சர்கள் சந்திப்பு என்று டெல்லியில் உதயநிதிக்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  உதயநிதி ஸ்டாலின் மோடியை தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்படி அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதுதான் திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சாக இருந்தது.

கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று சில தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.  தயாநிதிமாறன் திமுக தலைவரான ஸ்டாலினிடம், ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரசுக்கு 9 இடங்கள் கொடுத்தோம். வரும் எம்பி தேர்தலில் அவ்வளவு இடங்கள் காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டாம். கூட்டணிக் கட்சிகளுக்கும்  முன்பு கொடுத்த இடங்களை விட குறைவாகவே கொடுக்க வேண்டும். திமுக அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும்., ஏனென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் சாதகமாக இருக்காது என்றே சொல்கிறார்கள்.

எனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் ஆட்சி அமைப்பது என்பதில் திமுக பங்கு முக்கியமாக இருக்கும். பாஜகவுக்கு ஷார்ட்டேஜ் ஆக இருந்தாலும் நம்மை அவர்கள் ஆதரவு கேட்க தயங்க மாட்டார்கள்.  நாம் மத்திய ஆட்சியில் பங்கேற்று பத்து வருடங்கள் ஆகப் போகின்றன. எனவே வரும் எம்பி தேர்தலில் அதிகபட்ச இடங்களில் நாம் தமிழ்நாட்டில் போட்டியிட்டால்தான் மத்திய ஆட்சியை தீர்மானிக்க நம்மால் முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ‘ஒருவேளை பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துவிட்டால் தற்போதைக்கு நமக்கு கொடுக்கும் நெருக்கடிகளை மேலும் அதிகமாக்கக் கூடும்.  இப்போதே தமிழ்நாடு அரசு நிதிப் பற்றாக்குறையால் முக்கியமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்  அரசு நிர்வாகத்தை சீராக நடத்த நாம் சில இணக்கங்களை செய்துகொண்டாக வேண்டும்’ என்றும் ஸ்டாலினிடம் திமுகவின் டெல்லி முகங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

அதேபோல துரைமுருகனும் ஸ்டாலினிடம், ‘பாமக நம்மோடு வர விரும்புகிறார்கள்.  ஏழு இடங்கள் கேட்கிறார்கள். அவ்வளவு  எல்லாம் கொடுக்க வேண்டாம். மூன்று சீட்டுகளில் முடித்துவிடலாம்.’ என்று சொல்லியிருக்கிறார். இப்படி தலைமைக் கழக நிர்வாகிகளும் டெல்லி அரசியல் அறிந்த திமுக நிர்வாகிகளும் ஸ்டாலினிடம் பல்வேறு யோசனைகளை முன் வைத்து வந்தனர்.

ஆனால் ஸ்டாலினோ, ‘இப்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம். 2019 தேர்தல் எப்படி போட்டியிட்டோமோ அப்படியே போட்டியிடுவோம். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம்.  ஐஜேகே பாரிவேந்தருக்கு பதிலாக கமல்ஹாசனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். அதைத் தவிர மாற்றம் தேவையில்லை’ என்ற ரீதியில்தான் தனக்கு நெருக்கமானவர்களிடம் பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் உதயநிதி தனிப்பட்ட முறையில் மோடியை சந்தித்துப் பேசியதும் காங்கிரஸுக்கும் ஒரு வகையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் 1999 இல்  இருந்து 2004 வரை பாஜக  ஆட்சியில் பங்கேற்ற திமுக, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசோடு கூட்டணி அமைத்ததைப் பற்றி காங்கிரஸார் நன்கு அறிவார்கள். அந்த வகையில் உல்டாவாக இந்த முறை பாஜக பக்கம் திமுக போய்விடுமோ என்ற சுழல்களும்  காங்கிரசுக்குள் அடித்துக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்தான் தனக்கு நெருக்கமான தலைமைக் கழக நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசியதையே ஸ்டாலின் தனது பிறந்தநாள் மெசேஜாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

private message to modi stalin twist

‘2024 தேர்தல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை கொண்டு தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான்.

இதை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்லுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த  அனைத்து தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றோம் என்றால் அதற்கு காரணம் ஒற்றுமைதான். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று ராகுல் காந்தியை வைத்துக் கொண்டு  சேலத்தில் சொன்னேன். இங்கே இருக்கும் அழகிரி, தங்கபாலு ஆகியோர் அதற்கு சாட்சி’ என்று பேசினார்.

private message to modi stalin twist

இதன் மூலம் உதயநிதி மூலமாக பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் ஏதோ ஒரு  தனிப்பட்ட ரகசிய மெசேஜ் சொல்லியிருக்கிறார் என்ற தகவல்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.  ஆனால் இந்த கூட்டத்தில்   ‘பிரதமர் வேட்பாளர் என்பதை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று காங்கிரஸ் தலைவர் கார்கே சொல்லியிருப்பதே பாஜகவுக்கு பெரும் வெற்றி என்கிறார்கள் பாஜகவினர்.

மோடிதான் மூன்றாம் முறையும் பிரதமர் என்று  பாஜக மீண்டும் சொல்லி வரும் நிலையில்,  யார் பிரதமராவது என்பது இப்போதைக்கு முக்கியமல்ல, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே முக்கியம் என்று கார்கே சொல்லியிருக்கிறார். இதை பாஜகவினர் தங்களுக்கு சாதகமாகவே பார்க்கிறார்கள்” என்ற மெசேஜை  குரூப்பில் போஸ்ட் செய்தது வாட்ஸ் அப்.

ஈரோடு இடைத்தேர்தல்: 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி!

நாகாலாந்தின் முதல் பெண் எம்.எல்.ஏ ஆனார் ஹெகானி ஜகாலு

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.