பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் இன்று (மார்ச் 19) புகாரளித்துள்ளது. Prime Minister’s Road Show
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி மார்ச் 15ஆம் தேதி கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று கோவையில் நடந்த வாகன அணிவகுப்பில் பங்கேற்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்கினார்.
கோவை சாய்பாபா கோயில் சந்திப்பு பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் பிரதமர் மோடி அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊர்வலம் வந்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த வாகன அணிவகுப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும், இந்த அணிவகுப்பில் பள்ளி மாணவர்களும் பங்கேற்று இருந்தனர்.
குழந்தைகள் அல்லது பள்ளி மாணவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில்,
பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வாகன அணிவகுப்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டது.
அதில், ” வாரணாசி தொகுதியின் பாஜக வேட்பாளர் மோடி, கோவையில் மார்ச் 19-ஆம் தேதி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ரோடு ஷோ நடத்தியுள்ளார். இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாகும்.
மேலும், அந்த ரோடு ஷோவில் அரசு பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்.
இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்று (மார்ச் 19) கோவை மாவட்ட தேர்தல் ஆணையர் கிராந்திகுமார் பாடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “வாகன அணிவகுப்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
தலைமைக் கல்வி அதிகாரி மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையரிடம் இது தொடர்பான அறிக்கை கோரப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSK-விடம் உதவி கேட்ட அஸ்வின்… அவரின் ஆசை நிறைவேறுமா?
ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!