செஸ் ஒலிம்பியாட் திமுக குடும்ப விழாவா? பாஜக கேள்வி!

Published On:

| By Prakash

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரங்களில், தமிழக முதல்வரின் புகைப்படம் மட்டுமே உள்ளது என்றும் பிரதமர் மோடி புகைப்படம் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூலை 28) 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து பிஜேபியின் மாநில துணைத் தலைவர் தி.நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டி குறித்த தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது திமுக அரசின் மலிவான, தரம் தாழ்ந்த, வக்கிர மற்றும் குறுகிய மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் பொறுப்புள்ள முதலமைச்சருக்கு, சர்வதேச அளவில் நடைபெறும் விழாவில், நாட்டின் பிரதமருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம்கூட தெரியவில்லையே என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. இதுதான் திராவிட மாடலோ?” எனத் தெரிவித்துள்ளார்.
மாநில பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், “செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தைப் பார்த்தால், முதல்வர் குடும்ப விழாபோல் உள்ளது. விளம்பரத்தில் ஸ்டாலின் படம் இருப்பதில் தவறில்லை. பிரதமர் படமும் இடம்பெற வேண்டும். பேனரில் பிரதமர் படம் வைக்க மனமில்லை என்றால், ஏன் பிரதமரை அழைக்க வேண்டும்? பிரதமர் மோடி படம் விடுபட்டதற்குக் காரணம் தமிழக அரசின் தவறா, செஸ் கூட்டமைப்பு தவறா என தெரியவில்லை. பிரதமர் படம் இடம் பெறாததற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என்றார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பிஜேபி நிர்வாகிகள் தமிழக அரசு செய்திருக்கும் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்

Comments are closed.