ஐந்து லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு: அமைச்சர் பெரியகருப்பன்

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடப்பாண்டில் ஐந்து லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நாகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, அவர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்,  “பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் திட்டம் 1970ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வீட்டு வசதி வாரியம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. குடிசையில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களும் மாடி வீடுகளில் வசிக்க வேண்டும் என இந்தத் திட்டத்தை வடிவமைத்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தத் திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டு, 21 லட்சம் கூரை வீடுகளை ஐந்து ஆண்டு காலத்துக்குள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டமே பின்னர் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புக்கொண்டு மத்திய அரசு 72,000 ரூபாயும், மாநில அரசு 48,000 ரூபாயும் என ரூ.1 லட்சத்து 20,000 மதிப்பில் வீடுகள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஏராளமான பயனாளிகள் வீடுகள் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டனர்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு கொடுக்கும் நிதியை உயர்த்தி வழங்க முடிவு செய்தார். இதற்காக ஏற்கனவே வழங்கிய தொகையுடன் ரூ.10,000 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் வழங்கியது. ஆனால் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தை உயர்த்தி வழங்கியதால் மத்திய அரசு 32 சதவிகிதமும், மாநில அரசு 68 சதவிகிதமும் வழங்குகிறது.
இதனால் இனிவரும் காலங்களில் எந்தவிதமான தங்குத்தடையும் இன்றி வீடுகள் கட்டி முடித்து பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். நடப்பாண்டில் ஐந்து லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறினார்.
பின்னர் பிரதாப ராமபுரம் பகுதியில் புனரமைப்பு செய்யப்படும் பெரிய ஏரி, தலைஞாயிறு ஊராட்சி நாலுவேதபதியில் கட்டப்பட்டு வரும் நூலகம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் கரியாப்பட்டினம் – செண்பகநல்லூர் சாலை, நாகை ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவிலில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுரம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

-ராஜ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts