பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்டு 10) மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்.
இத்தகவலை பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. “ இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க தொடர்ந்து மறுத்து வந்ததால்… அவரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தன.
பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இருப்பது வெளிப்படையாக தெரிந்தாலும்… நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதன் மீது பிரதமர் மோடி உரையாற்றியே ஆக வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தியை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன.
அதுபோலவே ஆகஸ்டு 8 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆகஸ்டு 8,9 தேதிகளில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மீதும் மணிப்பூர் மாநில அரசின் மீதும் கடுமையான குற்றம் சாட்டினார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எம்பி பதவியை மீண்டும் பெற்ற ராகுல் காந்தி நேற்று (ஆகஸ்டு 9) மக்களவையில் பேசும்போது, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டு விட்டாள். பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பார்க்கவில்லை. அதனால்தான் அம்மக்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் பதிலுரையாற்ற இருப்பதை ஒட்டி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தனது அமைச்சரவை சகாக்களோடு மாலை அளிக்க இருக்கும் பதிலுரை பற்றி ஆலோசித்தார்.
அதேநேரம் நாடாளுமன்றப் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பாஜக அமைச்சர்கள், எம்பிக்களின் சிபாரிசில் அவை நடவடிக்கைகளை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கே இன்று முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதுவும் வழக்கமான நாட்களில் நடக்கும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டு நிறைய வடிகட்டல்களுக்குப் பிறகே நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது நாடாளுமன்ற கேமரா அவர்களை ஃபோகஸ் செய்யாமல் சபாநாயகரை காட்டிக் கொண்டிருந்ததை நேற்று கண்கூடாக காண முடிந்தது.
குறிப்பாக ராகுல் காந்தி, கனிமொழி ஆகியோர் பேசும்போது அவர்கள் உரையாற்றும் நேரடிக் காட்சிகள் காட்டப்படாமல் அவ்வப்போது கேமரா சபாநாயகர் இருக்கையையே ஒளிபரப்பியது.
உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதும் மீண்டும் தலைவர்களின் முகங்கள் கொஞ்ச நேரம் காட்டப்பட்டன.
இந்த சர்ச்சை நேற்று நடந்த நிலையில்தான் இன்று பார்வையாளர்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
–வேந்தன்
துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா ’ ட்ரெய்லர் வெளியீடு!
“மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்” – எடப்பாடியை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்