தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
ஜூலை 28 அன்று சென்னை ஜவஹர்லால்நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளின் பிரம்மாண்டமான தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு துவக்கி வைக்கிறார்.
ஜூலை 28 அன்று நண்பகல் 12 மணியளவில் குஜராத் மாநிலம் சபர்கந்தாவின் கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால்பண்ணையில் பல்வகைத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதன் பின் சென்னை வர இருக்கும் பிரதமர், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 6 மணியளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைப்பார்.
ஜூலை 29 அன்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதன் பின் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப (கிஃப்ட்) நகருக்கு பயணம் செய்ய அவர் காந்திநகர் செல்லவிருக்கிறார். அங்கு பிற்பகல் 4 மணியளவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
2022 ஜூன் 19 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன் இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20,000 கி.மீ. தூரத்திற்கு 75 முக்கியமான இடங்கள் வழியாகப் பயணம் செய்து மகாபலிபுரத்திற்கு வந்து சேர்கிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கௌரவம் மிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.
ஜூலை 29 அன்று சென்னையில் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்குகிறார். மேலும் அங்கு திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.
அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி .என். அண்ணாதுரையின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 3 பிராந்திய வளாகங்களையும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக 13 அமைப்பு கல்லூரிகளையும், 494 இணைப்பு கல்லூரிகளையும் இது பெற்றிருக்கிறது.
பிரதமர் அலுவலகம் மேற்கண்ட தகவல்களை இன்று (ஜூலை 26) வெளியிட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விழாவுக்காக தமிழக அரசின் சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் எம்பிக்கள் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சார்பில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விழாக்களில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்.
–வேந்தன்