கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 40 மத்திய அமைச்சர்கள் 400 முறை பயணம் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 40 Ministers visited Tamil Nadu 400 times
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.20 ஆயிரம் கோடியில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
எனது தமிழ் குடும்பமே, உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தனது பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி,
“2024ஆம் ஆண்டில் எனது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இருந்து தொடங்கியிருக்கிறது. இதை நான் பாக்கியமாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
சாலை வழிகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள், எரிசக்தி ஆற்றல் ஆகிய திட்டங்களுக்காக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.
2023ஆம் ஆண்டின் கடந்த சில வாரங்கள், தமிழ்நாட்டில் பலருக்கும் கடினமான காலமாக அமைந்துவிட்டது. கன மழையால் நமது அன்பானவர்களை இழந்துவிட்டோம். சொத்துகளை, உடமைகளை இழந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நெருக்கடியான காலத்தில் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுடன் துணையாக நிற்கிறது. தமிழ்நாடு அரசுக்கு சாத்தியாமன உதவிகளை செய்து வருகிறோம்.
இந்த நேரத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை நினைவு கூர்கிறேன். அவர் நமது நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக முக்கியமான பங்களிப்பை அளித்தார்.
வரவிருக்கும் 2025ஆம் ஆண்டில் பாரதத்தை நாம் வளர்ந்த தேசமாக்க வேண்டும். நான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூறும்போது பொருளாதாரம், கலாச்சாரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் சிறப்பான பங்கையும் காண முடிகிறது. நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்பை தமிழ்நாட்டில் காண முடிகிறது.
தமிழ்நாட்டின் வசம் தமிழ் மொழி மற்றும் ஞானம் என்ற பழைமையான கருவூலம் இருக்கிறது. திருவள்ளுவர் தொடங்கி பாரதி வரை பலரும் அற்புதமான படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.
சி.வி.ராமன் தொடங்கி இன்று வரை அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பலரை இந்த மண் கொடுத்திருக்கிறது. அதனால் தான் நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறேனோ அப்போது ஒரு புதியசக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன்.
திருச்சிராப்பள்ளி நகரம் என்றாலே வளமான வரலாற்றுக்கான சான்றுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களின் ஆட்சி மாதிரிகள் கண்கூடாக காண கிடைக்கின்றன.
எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு, அவர்களிடம் எனக்கு மிக நெருக்கமான உறவு உண்டு. அவர்களிடம் இருந்து தமிழ் கலாச்சாரத்தை கற்க கூடிய நல் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது.
உலகின் எந்த இடத்துக்கு நான் சென்றாலும் கூட தமிழ்நாட்டை பற்றி புகழ்ந்து பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடியவில்லை. தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில், தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து பரவ வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள், மருத்துவமனைகள், ரயில் பாதை. துறைமுகம் என கட்டுமானம் மற்றும் சமூக கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளை செய்திருக்கிறோம். உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறார்கள்.
மேக் இன் இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக தமிழ்நாடு மாறிகொண்டிருக்கிறது. மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அடிநாதமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டில் மத்திய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு 400 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால், இந்த இடத்தின் இணைப்புத் திறன் 3 மடங்கு அதிகரிக்கும்.
இன்று தமிழ்நாட்டின் ரயில் இணைப்பு திறனை மேலும் வலுவாக்க 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து எளிமையாகும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இது தொழில்களுக்கும், மின்சார உற்பத்திக்கும் வலுவூட்டும்.
இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற மக்கள் நல திட்டங்கள், ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம், வேலூரை போன்ற மகத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கின்றன. இவை நமது நம்பிக்கை, ஆன்மீகம், மற்றும் சுற்றுலாவின் பெரிய மையங்கள்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!
அரசியலிலும் அவர் கேப்டன்: அரசு விழாவில் விஜயகாந்தை புகழ்ந்த மோடி
40 Ministers visited Tamil Nadu 400 times