17வது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை இன்று (ஜூன் 5) குடியரசுத் தலைவரிடம் அளித்துவிட்டு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.
நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணிக் கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே பெரிதும் நம்பியுள்ளது.
இதற்கிடையே ஆட்சி அமைப்பது குறித்து இரண்டு கூட்டணிகளும் டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்போதைய 17வது மக்களவையை கலைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தையும் அளித்தார். அதனை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்.
ஜூன் 8ஆம் தேதி பதவியேற்பு!
அதைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணி அளவில் டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர பிரதேசம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையை பெறத் தவறியது, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் மீண்டும் ஆட்சியை அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதனையடுத்து ஜூன் 7ம் தேதி மதியம் 2 மணிக்கு டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் மோடி, ஜூன் 8ஆம் தேதி 3வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’பொண்ணு அவங்க இல்ல’ : தம்பி திருமணத்திற்காக VP வைத்த கோரிக்கை!