Prime Minister Modi Controversy Speech - Tamilisai Explanation

”சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவராக மோடியை சித்தரிக்கிறார்கள்” : தமிழிசை

அரசியல்

காங்கிரஸ் பொதுமக்களின் சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்ரல் 24) விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொது மக்களின் சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்து விடும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பிருந்தார்.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சென்னையில் இன்று (ஏப்ரல் 24) தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பிரதமர் இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒன்றிணைந்த வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருகிறார்.

‘அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம்’ என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அதனால், பிரதமர் மோடி சிறுபான்மையின மக்களை வேறுபடுத்தி பார்த்ததே இல்லை. 10 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கியதில், குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இதில் பயன்பெற்றுள்ளனர்.

பிரதமரின் ‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினருமே பலனடைந்துள்ளனர். இதில், எந்தவித வேறுபாடுகளும் பார்க்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காக செயலாற்றி வருகிறார். ஆனால், காங்கிரஸ் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிறகும், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்திருந்து, அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

2006ல் மன்மோகன்சிங், இந்த நாட்டின் சொத்தில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை இருக்கிறது என்று பேச்சளவிற்கு மட்டும் சொல்லிவிட்டு, அவர்களுக்கு என்று எந்தவிதத்திலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை.

பிரதமர், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு ‘முத்தலாக்’ ஒழிப்பு முறையை கொண்டு வந்துள்ளார். தற்போது அனைவரும் பெண் உரிமை என்று பேசுகிறார்கள். ஸ்டாலினும் பெண் உரிமை குறித்து பேசுகிறார்.

ஆனால், அவர்கள் ஆட்சி காலத்தில் எந்த இஸ்லாமிய பெண்ணாவது தனியாக ஹஜ் யாத்திரை போக முடியாது என்பதை மாற்ற நினைக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி, பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என அவர்களுக்காக தளர்வுகளை ஏற்படுத்தினார்.

அனைத்திற்கும் மேலாக, அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்லா விதத்திலும் சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்த பிரதமர் மோடியை, அவர் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படுபவர் போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி தேர்தலை முன்னெடுத்து செல்ல எதிர்க்கட்சியினர் முயல்கிறார்கள்.

பிரதமர் மோடி, ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்துக்கள் பறிபோய்விட கூடாது என்று தான் சொன்னார். நாம் அனைவரும் அதனை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் இருந்து தற்போது அதிகமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கிறார்கள் அவர்களைதான் ஊடுருவல்காரர்கள் என தெரிவித்திருந்தார்.

ஒரு கோடிக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் ரேசன் அட்டை ஆகியவற்றை கொடுத்துள்ளதால், நமது மக்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் மோடி கூறினார்.

ஆனால், இதை காங்கிரஸ் கட்சியினர் வேறு விதமாக மக்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அதேசமயம், இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராகுல் காந்தி எங்கு சென்றார் என்று கூட தெரியவில்லை.

ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கியமான தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது, நாட்டு மக்களுடன் நிற்கக்கூட முடியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தற்போது பிரதமரை குறைகூறுவது என்பது வேதனையாக உள்ளது.

பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார். 25 கோடி மக்களை வறுமை கோட்டிலிருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் அனைவருக்குமே தடுப்பூசி கொடுக்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த நாடுகள் கூட கொரோனாவை எதிர்க்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தபோது, பிரதமர் மோடி அதனை சிறப்பாக எதிர்க்கொண்டார். அதனால், 45 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.

ஆகையால், இந்த தேர்தல் பிரதமர் மோடியின் வளர்ச்சிக்குரிய தேர்தல். அதை வேண்டும் என்றே திசைத்திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள்… விவிபேட் வழக்கு ஒத்தி வைப்பு!

‘காதலே காதலே’ மஞ்சுமேல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0