கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய மின் திட்ட தொடக்க விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) சென்னை வருவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டில் 4வது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.
மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 2.45 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்லும் அவர், அங்கு 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வரும் பிரதமர், விமானநிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு மாலை 5 மணி அளவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பாஜக உற்சாக வரவேற்பு!
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக, ஜிஎஸ்டி மற்றும் அண்ணா சாலையில் தமிழக பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் காரில் வரும்போது சாலையின் இருபுறங்களில் இருந்தும் அவரை பூ தூவி வரவேற்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் ’தாமரை மாநாடு’ என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி, மாலை 6.15 மணிக்கு கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
அவரது தலைமையில், பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) நேரடி மேற்பார்வையில் சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த போலீஸார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் உட்பட மொத்தம் 15,000 போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வணிக வாகனங்கள் செல்ல தடை!
அதே போல பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள அண்ணாசாலை, ஒய்.எம்.சி.ஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய கைலாஷ் – ஹால்டா சந்திப்பு, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் – கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் – கத்திப்பாரா சந்திப்பு, அசோக் பில்லர் – கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு – கான்கார்ட் சந்திப்பு, அண்ணா சிலை – மவுண்ட் ரோடு வரை மற்றும் தேனாம்பேட்டை – நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகிய பகுதிகளில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
WPL 2024 : டெல்லி ஹாட்ரிக் வெற்றி… கடைசி இடத்தில் குஜராத்!
ஏரிகளில் சரியும் தண்ணீர் இருப்பு : சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?